'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
கரூர்: எம் சாண்ட ஏற்றிச்சென்ற லாரி விபத்து; வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கோடந்தூரில் செயல்பட்டுவரும் அரவிந்த் புளூ மெட்டல் கல்குவாரியில் தங்கி 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் கட்டுமான பணிக்காக எம் சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கரூர்- கோவை இணைப்பு சாலையில் தென்னிலை அருகே உள்ள முதலிகவுண்டம்பாளையம் அருகே அதிக வேகத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியின் மேல்பகுதியில் பயணித்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கந்தர் கேட்டா (வயது: 21), வித்யநாத் பிரபாகரன் (வயது: 47) மற்றும் அஜய் பங்கரா (வயது: 30) ஆகிய மூவரும் எம் சாண்ட் குவியலில் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.

அதோடு, அந்த லாரியில் பயணித்த அல்ஜீம் பர்வா (வயது: 30) என்பவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், லாரி ஓட்டுநர் சந்திரகுமார் (வயது: 39) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் தகவலின்பேரில் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் தென்னிலை காவல்துறை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தென்னிலை காவல் நிலைய போலீஸர் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு, தடய ஆய்வாளர் குழுவினருடன் இணைந்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து க.பரமத்தி வட்ட காவல் ஆய்வாளர் தங்கராஜ், "தென்னிலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அங்கிருக்கும் சமுக ஆர்வலர்கள் மத்தியில், அனுமதிக்கபட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவு பாரம் ஏற்றி சென்ற எம் சாண்ட் லாரியில் பணியாட்களை அமர வைத்து சென்றபோது, இந்த விபத்து நடைபெற்றதாகக் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அளவு கொண்டு எம் சாண்ட் லாரிகள் இயக்கப்பட வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி ஓன்று கவிழ்ந்ததில் மூன்று வடமாநில தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




















