’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வ...
பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானம் பேச அழைத்து மீண்டும் வன்கொடுமை செய்த வழக்கறிஞர்
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை வழக்கறிஞர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா அருகிலுள்ள எட்மத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த 24 வயது பெண், 2022 ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பான வழக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜராகுவதற்காக பாதிக்கப்பட்ட பெண் ஆக்ரா நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். கோர்ட் விசாரணைக்கு ஆஜராகி வெளியே வந்தபோது, ஜிதேந்திரசிங் என்ற வழக்கறிஞர் அந்தப் பெண்ணை அணுகி, “இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியில் பேசி தீர்த்து வைக்கிறேன்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அப்பெண் கூறுகையில், “நானும் அடிக்கடி கோர்ட்டிற்கு வந்து சோர்வடைந்துவிட்டேன். எனவே வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் சொன்ன வார்த்தைகளை நம்பினேன். குற்றவாளிகளை சந்திப்பதற்காக என்னை அவரது காரில் அழைத்து சென்றார். செல்லும் வழியில் காரிலேயே என்னிடம் பீர் குடிக்கும்படி கேட்டார்.
ஒரு குற்றவாளியிடம் என்னை அறிமுகப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதற்குள் இரவாகிவிட்டது. எனவே இரவில் ஆக்ராவில் தங்கிவிட்டு, காலையில் வேறு குற்றவாளிகளையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்று ஜிதேந்திரா தெரிவித்தார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.
என்னை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு எனக்கு தனி அறை பதிவு செய்து கொடுத்தார். ஆனால் இரவில் சிறிது நேரம் கழித்து மீண்டும் எனது அறைக்கு அவர் வந்தார்.
வழக்கு குறித்து பேச வேண்டும் என்று சொன்னார். எனவே நானும் கதவை திறந்துவிட்டேன். உள்ளே வந்தவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். என்னை வெளியில் போகவிடாமல் அடைத்து வைத்திருந்தார்.
நான் தண்ணீர் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியில் தப்பி வந்து மறைந்திருந்தேன். அவர் அறையில் இருந்து வெளியில் வந்து என்னை தேடினார். அவர் அறையில் இருந்து வெளியில் சென்றதும், நான் அந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டேன்.
போலீஸாரை தொடர்பு கொள்ள முயன்றேன், ஆனால் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் அந்த அறையில் இருந்துவிட்டு, காலையில் சென்று போலீஸில் புகார் செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரை தொடர்ந்து உடனே போலீஸார் ஜிதேந்திராவை கைது செய்ய கோர்ட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸார் சென்றனர்.
போலீஸார் வந்திருப்பதை பார்த்ததும் ஜிதேந்திரா வீட்டின் மாடியில் இருந்து பின்புறமாக குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது இரண்டு கால்களும் உடைந்துவிட்டது.
அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
















