2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்
இளம்பெண்ணைக் கொன்று மூட்டைகட்டி வீசிய ஜோடி; சாலையோரம் தவித்த கைக்குழந்தை - பகீர் பின்னணி
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவ விவசாயி சக்திவேல். இவரின் மனைவி அம்சா (வயது 28). இவர்களுக்கு 4 வயதில் நிவிஸ்தா என்ற மகளும், ஒன்றரை வயதில் நிவிலன் என்ற ஆண் கைக்குழந்தையும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த மாதம் 15-ம் தேதி, கைக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக குழந்தையைத் தூக்கிக்கொண்டு அம்சா பேருந்தில் ஏறிப் புறப்பட்டு வந்திருக்கிறார். அதன் பிறகு, இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சிக்குள்ளான கணவர் சக்திவேல் மற்றும் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடத் தொடங்கினர். இதனிடையே, அன்று இரவு 8 மணியளவில், எஸ்.கே.பி கல்லூரி அருகே சாலையோரமாக குழந்தை நிவிலன் தனியாக அழுதபடி நின்றுக்கொண்டிருந்தான். இதைக் கவனித்த பெண் ஒருவர், குழந்தையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

`குழந்தை யாருடையது, இங்கு எப்படி வந்தது?’ என்று போலீஸார் விசாரணையை முன்னெடுத்தபோது, கழிக்குளம் சக்திவேல் தன் மனைவி, குழந்தையை தேடிக்கொண்டிருப்பதாகத் தெரியவந்தது. கீழ்பென்னாத்தூர் காவல் நிலையப் போலீஸார், சக்திவேலை வரவழைத்து அவரிடம் குழந்தையை ஒப்படைத்து, விசாரணை நடத்தினர்.
அப்போது, `மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்ற தன் மனைவி எங்கே போனாள் என்று தெரியவில்லை, சார்..?’ எனப் பதறியிருக்கிறார். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீஸார், அம்சாவைத் தேடத் தொடங்கினர். அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாமல் இருந்தது.
இந்த நிலையில்தான், நேற்றைய தினம் கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள ஏந்தல் பைபாஸ் சாலையோரமாக... சம்மந்தனூர் கரும்புத் தோட்டத்துக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த மக்கள், உடனடியாக கீழ்பென்னாத்தூர் போலீஸாருக்குத் தெரியப்படுத்தினர்.
போலீஸார் விரைந்து வந்து மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது, அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அனைவருமே திடுக்கிட்டுப் போயினர். உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சமீபத்தில் மாயமான இளம்பெண்களின் விவரங்களை சேகரித்து விசாரித்தபோது, கொலையான பெண் கடந்த மாதம் 15-ம் தேதி மாயமான கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அம்சா எனத் தெரியவந்தது. `அம்சாவுக்கு என்ன நேர்ந்தது? யார் அவரைக் கொலை செய்தது? கொலையாளிகள் தான் குழந்தையைக் கொண்டு சென்று எஸ்.கே.பி கல்லூரிக்கு அருகே விட்டுச் சென்றார்களா?’ என புலனாய்வைத் தொடங்கினர்.

கரும்புத் தோட்டம் இருக்கின்ற சுற்றுவட்டாரப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தபோது, ஸ்கூட்டியில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சந்தேகத்திற்கிடமாக அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்ததும், கரும்புத் தோட்டப் பகுதிக்கு வந்துசெல்வதும் பதிவாகியிருந்தது.
அந்தப் பெண்ணின் அடையாளத்தை கண்டபோது, அவர் கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான நேத்ரா எனத் தெரியவந்தது. கணவரைப் பிரிந்த நேத்ரா சில ஆண்டுகளாக வேங்கிக்கால் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். கீழ்பென்னாத்தூர் அருகிலுள்ள கொல்லக்கொட்டா பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவருடனும் நேத்ராவுக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி வெளியே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட அம்சாவும் கழிக்குளம், சந்தேக வலையில் சிக்கிய நேத்ராவின் சொந்த ஊரும் கழிக்குளம் என்பதால், போலீஸார் இருவரையும் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, பகீர் தகவல்கள் வெளிவந்தன. அம்சாவை கொலை செய்ததை நேத்ரா ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று, மருத்துவமனைக்குச் செல்ல குழந்தையுடன் திருவண்ணாமலைக்கு வந்த அம்சாவை, தனது ஆண் நண்பனுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த நேத்ரா பார்த்துவிட்டு, வாகனத்தை நிறுத்தி பேச்சுக்கொடுத்திருக்கிறார்.
இருவரும் ஒரே கிராமம்; ஏற்கெனவே அறிமுகம் என்பதால், அம்சாவும் சகஜமாக நேத்ராவிடம் பேசியிருக்கிறார். அப்போது, அம்சாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயின் நேத்ராவின் கண்களை உறுதியிருக்கிறது. `அதை எப்படியாவது பறித்தாக வேண்டும்’ என்று திட்டமிட்ட நேத்ரா, கட்டாயப்படுத்தி அம்சாவைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் சென்றபிறகு அம்சாவைத் தாக்கி தங்கச் செயினை பறித்த நேத்ராவும், அவரின் ஆண் நண்பனும், `இப்படியே வெளியில்விட்டால் அவள் போலீஸுக்கு போவாள். நாம் மாட்டிக்கொள்வோம்’ என்று கருதி, அம்சாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கின்றனர். இதையடுத்து, சாக்கு மூட்டையில் உடலைக் கட்டி கரும்புத் தோட்டத்துக்குள் கொண்டு சென்று வீசியிருக்கின்றனர்.
பிறகு, யாருக்கும் சந்தேகம் வராதபடி அம்சாவின் கைக்குழந்தையையும் எஸ்.கே.பி கல்லூரிக்கு அருகே கொண்டுசென்று விட்டுவிட்டு தப்பிச் சென்றதும், விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றிய போலீஸார், நேத்ராவையும், அவரின் ஆண் நண்பன் திருப்பதியையும் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடம், `வெறும் 4 பவுன் நகைக்காகத்தான் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா?’ எனவும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.















