கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத...
கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி
கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள்களை, அவர்களின் முகவரிக்கு அனுப்பும் பணியும் அங்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் அங்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய 7 கிலோ வாஷிங் பவுடர் திருப்பி அனுப்பியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கவே நிறுவனத்தினர் சந்தேகமடைந்து பார்சல் செய்த பொருள்களை எல்லாம் ஆய்வு செய்துள்ளனர்.
அதில் ஆர்டர் செய்த பொருள்கள் இல்லாமல், அதற்கு பதிலாக லேப்டாப் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் பேக்கிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர்,

தங்களின் முகவரிக்கு சோப்பு, கிளினிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு, பார்சல் செய்யும்போது அதில் ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட பொருள்களை வைத்து அனுப்பி வந்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஃபிளிப்கார்ட் நிறுவனம் செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
அதனடிப்படையில் விக்னேஷ், கிஷோர் குமார், ஶ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், ஆஷா, முகமது அலி, அஞ்சலி ஆகிய 8 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அஞ்சலி தலைமறைவாக, மற்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.





அவர்களிடம் ஐ போன், விவோ, சாம்சங், நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஏர் பட்ஸ், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட ரூ.11.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவான அஞ்சலியை போலீஸார் தேடி வருகின்றனர்.
















