சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்...
`மகளைப் பராமரிக்க ரூ.4 லட்சம் போதவில்லை' - ஹசின் ஜஹன் கோர்டில் மனு
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜஹன் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஷமி தன் மனைவிக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு மாதம் ரூ.2.5 லட்சமும் பராமரிப்பு தொகையாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக குடும்ப நீதிமன்றம் குழந்தைக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.80 ஆயிரமும், ஜஹனுக்கு மாதம் ரூ.50 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டு இருந்தது. அதை உயர் நீதிமன்றம் அதிகரித்து உத்தரவிட்டது.

தற்போது ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் ரூ.4 லட்சம் போதுமானதாக இல்லை என்றும், அதனை அதிகரித்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜஹன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருக்கிறார்.
இம்மனுவை ஜஹன் வழக்கறிஞர் ஷோபா குப்தா தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி மனோஜ் மிஸ்ரா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதை ஏன் தாக்கல் செய்துள்ளீர்கள்? ரூ.4 லட்சம் போதுமானதாக இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜஹன் சார்பாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் ஷோபா,''ஷமியின் வருமானம், நீதிமன்றம் நிர்ணயித்த பராமரிப்புத் தொகையைவிட அதிகமாக இருக்கிறது.
பிரதிவாதி ஷமி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், மேலும் மனுதாரருக்கும், மைனர் மகளுக்கும் சமமான அளவு பராமரிப்பு தொகை வழங்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக வேண்டுமென்றே நீதிமன்றங்களை நாடுகிறார். உயர் நீதிமன்றத்தில் ஷமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி அவரது மாதாந்திர செலவு ₹1.08 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ₹500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருமணமானதிலிருந்து மனைவி வேலையில்லாமல் இருப்பதாகவும், அவரது அன்றாடத் தேவைகளையும் அவரது குழந்தையின் அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்ய அவருக்கு சுயமான வருமான ஆதாரம் இல்லை" என்றும் குறிப்பிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினர் இடையே மத்தியஸ்தம் செய்யவா என்று கேட்டனர். அதோடு இதுதொடர்பான விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து, ஷமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். ஏற்கனவே ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைபபடுத்தியதாக குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
அதோடு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டபோது நிலுவை தொகையாக ரூ.2.4 கோடி ஜஹனுக்கு ஷமி கொடுக்க வேண்டியிருந்தது. அந்தத் தொகையை செப்டம்பரில் இருந்து தவணை முறையில் கொடுக்கும்படி ஷமிக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.















