சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்...
`அரசு நிலம் என்று தெரியாது'- அரசு நில விற்பனை ரத்து, வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் மிஸ்ஸிங்!
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவாருக்கு புனேயில் உள்ள முந்த்வா என்ற இடத்தில் உள்ள அரசு நிலம் 40 ஏக்கர் வெறும் ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1800 கோடியாகும். ஆனால் அதனை அஜித் பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் கம்பெனிக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டார். அஜித் பவார் இவ்விவகாரம் தனக்கு தெரியாது என்று நழுவிக்கொண்டார். ஆனால் அதன் பிறகு அவர் கொடுத்திருந்த விளக்கத்தில்,'' 3 மாதங்களுக்கு முன்பு ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்தேன். இவ்விவகாரத்தில் நானோ அல்லது எனது அலுவலகத்தில் இருந்தோ யாரும் போன் செய்யவோ அல்லது உதவி செய்யவோ இல்லை.
இந்த நில பரிவர்த்தனை குறித்து எந்த கட்டத்திலும் எங்களுக்கு தெரியாது. எனக்கு தெரிந்திருந்தால் நான் அது குறித்து சொல்லி இருப்பேன். பார்த் பவாருக்கு அந்த நிலம் அரசாங்க நிலம் என்று தெரியாமல் இருந்திருக்கலாம்.

நில ஒப்பந்தம் சட்டத்தின் வரம்பிற்குள் இருந்தது. இருப்பினும், பொது வாழ்வில், தவறு நடந்ததாக சந்தேகிக்கப்படுவதைக் கூட நாம் அனுமதிக்கக்கூடாது. குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய பார்த் பவார் ஒப்புக்கொண்டுள்ளார். விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்வதற்காக ஆவணம் பதிவு அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டுள்ளது. இதில் ஒரு பைசா கூட கைமாறவில்லை. நில விற்பனை ஒப்பந்தம் முழுமையடையவில்லை. சம்பந்தப்பட்ட நிலத்தை 2005-06ம் ஆண்டு சிலர் பரிவர்த்தனை செய்துள்ளனர். இது குறித்து தங்களுக்கு தெரியாது என்று பார்த் பவாரும், அவரது நண்பர் திக்விஜய் பாட்டீலும் தெரிவித்துள்ளனர். நான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு போன் செய்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும், தவறு செய்தால் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும்படி சொல்லிவிட்டேன்.
விசாரணைக்கு கமிட்டி அமைத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளேன். குற்றச்சாட்டுக்களை கூறுவது எளிது. ஆனால் உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
அரசு நிலமாக இருந்தால் அதனை விற்பனை செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது எப்படி அந்த நிலம் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை கமிட்டி விசாரிக்க வேண்டும். கடந்த 35 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் நான் விதிகளை மீறியதில்லை. நீர்ப்பாசன ஊழல் விவகாரத்தில் என் மீது நியாயமற்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டது'' என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டோம். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை அஜித் பவாரும் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவித்துள்ளார். போலீஸார் இந்த நிலமோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அஜித் பவார் மகன் பார்த் பவாரின் பார்ட்னர் திக்விஜய் பாட்டீல் பெயர் இடம் பெற்று இருக்கிறது.
திக்விஜய் பாட்டீலுக்கு சர்ச்சைக்குறிய நிலத்தை வாங்கிய கம்பெனியில் ஒரு சதவீதம் தான் பங்கு இருக்கிறது. ஆனால் அவரது பெயர்தான் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கிறது. இது குறித்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,''நிலத்தை வாங்கிய கம்பெனியில் அஜித் பவார் மகனுக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு சதவீத பங்கு இருப்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கமளித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில்,''பத்திர பதிவில் கையெழுத்திட்டவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது''என்று தெரிவித்தார்.














