சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்...
கமல் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்: ``நேற்றைய மாலை விருந்தில்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பன்முகத் திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டுச் செல்லும் தீராத கலைதாகமும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டவர்.
என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்புநிறை பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை நடிகரும், மக்கள் நீதிமய்யத் தலைவருமான கமல்ஹாசனின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருக்கிறார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,``என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கு நன்றி.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமதி. கிருத்திகா உதயநிதி தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் திரு. சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது.
நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














