சென்னை: "இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம்" - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய ...
காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவராக வேலை செய்த ரஞ்சித் (வயது: 25) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்று அறிந்த வினிதா காதலை முறித்துக் கொண்டதாகவும், இதனால் ரஞ்சித் கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உடல்நிலை சரியில்லை என்பதால் வினிதா குளக்காரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த ரஞ்சித் வினிதாவை கொலை செய்யும் நோக்கத்துடன் இரவு 11:30 மணிக்கு கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து வந்ததோடு, படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த வினிதா மீது ஜன்னல் வழியாக ஊற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் வினிதாவின் உடலில் கொதிக்கும் எண்ணெய் பட்டதால் வலி தாங்கமுடியாமல் அவர் துடித்து கதறியுள்ளார்.
இதனை அறிந்த வினிதாவின் பெற்றோர், வினிதாவை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வினிதாவின் பெற்றோர் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர். கடவூர் அருகே காதலை மறுத்த கல்லூரி மாணவி மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















