சென்னை: "இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம்" - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய ...
ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது.
சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை சோம பிரதோஷத்தை முன்னிட்டு தீபோற்சவ விழா நடத்தப்படும். விழா முடிந்த பிறகு, பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்களைக் கடவுளுக்குப் படைத்து, அவற்றை ஏலம் விடுவது வழக்கம்.
இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஒரு கிலோவிற்கும் குறைவான எடையுள்ள ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. உதய் ராணே என்ற பக்தர் இந்தப் பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார்.
இந்த ஏலத்தில் பப்பாளி மட்டுமல்லாமல், மற்ற பழங்களும் அதிக விலைக்கு ஏலம் போயியுள்ளன. ஒரு தேங்காய் ரூ.1,000-க்கும், ஒரு டஜன் வாழைப்பழங்கள் ரூ.800-க்கும் ஏலம் விடப்பட்டுள்ளன.
ஒரே ஒரு தட்டுப் பழங்கள் மூலம் கோயிலுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து பழங்களை வாங்குவது, வணிக நோக்கத்தில் அல்ல, மாறாக பக்தியின் வெளிப்பாடாகவும், சமூகத்தில் ஒரு கௌரவமாகவும் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடவுளுக்குத் தங்களால் முடிந்த காணிக்கையைச் செலுத்துவதே இதன் நோக்கம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

















