Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
`பள்ளி, கல்லூரி மாணவர்களே டார்கெட்' - ஊட்டியில் சிக்கிய ஒடிசா கஞ்சா வியாபாரி!
மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தது வருகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு கூடலூர் வழியாக தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை பதுக்கி கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஊட்டி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இளைஞர் ஒருவர் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கண்காணிக்கும் மேற்கொண்டதில் அவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முனா சாகு என்ற இளைஞன் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளான். கஞ்சா பழக்கம் உள்ள இவனிடம் பலரும் கஞ்சாவை வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அவ்வப்போது சொந்த ஊருக்குச் செல்லும் இவன், கிலோ கணக்கில் கஞ்சாவை பார்சல் செய்து ரயிலில் கொண்டு வந்துள்ளான். அங்கிருந்து பேருந்துகள் மூலம் ஊட்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்திருக்கிறான்.

இவனிடம் தொடர்பில் இருந்த பலரும் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிவைத்து கஞ்சாவை விற்பனை செய்ததுடன் அவர்களையும் விற்பனையில் ஈடுபடுத்த முயற்சி செய்திருக்கிறான். கூட்டாளிகள் உட்பட மொத்த கும்பலையும் பிடிக்கும் முயற்சியில் தீவிர விசாரணை ரகசியமாக நடைபெற்று வருகிறது. கும்பலை கூண்டுடோடு பிடிக்கும் நோக்கில் முனா சாகுவின் புகைப்படங்களைக் கூட பகிராமல் வைத்திருக்கிறோம்" என்றனர்.

















