Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை
243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.
இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
மறுபக்கம், மகாபந்தன் கூட்டணியில் ஆர்.ஜே.டி 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் 9-வது முறையாக முதல்வராக மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

மகாபந்தன் கூட்டணியில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்முறையாக முதலமைச்சராகச் சேவை செய்ய வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.
எல்லாவற்றுக்கும் மேல், இரு கட்சிகளும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியிருக்கின்றன. இந்த நிலையில், நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
तवा से रोटी पलटती रहनी चाहिए नहीं तो जल जाएगी।
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) November 6, 2025
20 साल बहुत हुआ! अब युवा सरकार और नए बिहार के लिए तेजस्वी सरकार अति आवश्यक है। pic.twitter.com/KSKnwtf57D
இன்று தன் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் மனைவியுடன் வாக்களித்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ``சூடான தவாவில் ரொட்டியைத் திருப்பிப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இலையெனில் அது கருகிவிடும். 20 வருடங்கள் என்பது மிகவும் நீண்டது, அது போதும். புதிய பீகாருக்கு தேஜஸ்வி தலைமையிலான அரசு முக்கியம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
பீகாரில் 2000-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி, பா.ஜ.க, நிதிஷ் குமாரின் சமதா கட்சி என்ற மும்முனைப் போட்டியில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டமன்றம் அமைந்தது.
அப்போது பா.ஜ.க-வும், சமதாவும் இணைய நிதிஷ் குமார் முதல்முறையாக முதலமைச்சரானார்.
ஆனால், அந்தக் கூட்டணியால் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஏழே நாள்களில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது.

அதன்பின்னர், காங்கிரஸின் ஆதரவுடன் ஆர்.ஜே.டி ஆட்சியமைக்க லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி 2000 மார்ச் முதல் 2005 மார்ச் வரை முதல்வராக நீடித்தார்.
பின்னர், 2005 பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அக்டோபரில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடந்தது.
அதிலும் யாருக்கும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. இருப்பினும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனியாக அதிக இடங்களை வென்றிருந்தது.

பின்னர், ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க-வும் இனைந்து ஆட்சியமைக்க இரண்டாவது முறையாக நிதிஷ் குமார் முதலமைச்சரானார்.
இம்முறை முதல்முறை போல அவரின் பதவிக்காலம் வெறும் ஒரு வாரத்துக்கு மட்டும் நீடிக்காமல், இன்றுவரை இரு தசாப்தங்களாக நீடிக்கிறது (நடுவில் 2014 மே - 2015 பிப்ரவரி வரை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்).
எத்தனைக் கூட்டணிகள் நிதிஷ் குமார் மாறினாலும், அக்கூட்டணியில் அவரின் கட்சி குறைவான இடங்களைப் பெற்றிருந்தாலும் அவர்தான் முதலமைச்சர்.
அதனால்தான், 20 ஆண்டுகள் ஒருவருக்கே வாய்ப்பளித்தது போதும் புதிய பீகார் அமைய புதிய முதலமைச்சர் வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் இன்று வாக்காளர்களிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.















