` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் ல...
குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
திடீரென கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மொகமத் காணாமல் போய்விட்டார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மொகமத் வீட்டிற்குச் சென்று போலீஸார் விசாரித்தனர். மொகமத் மனைவி ரூபிக்கு இம்ரான் வகேலா என்பவருடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இம்ரான் வகேலாவைப் பிடித்துச்சென்று விசாரித்தபோது மொகமத்தைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வகேலாவிடம் மேற்கொண்டு விசாரித்த போது ரூபியும், வகேலாவும் சேர்ந்து மொகமத்தைக் கொலை செய்து அவர்கள் வசித்த அதே வீட்டு சமையல் அறையில் புதைத்திருந்தது தெரிய வந்தது.

சமையல் அறையில் புதைத்துவிட்டு அதன் மீது சிமெண்ட் போட்டு டைல்ஸ் பதித்து இருந்தனர். அதன் பிறகு அதே சமையல் அறையில்தான் ரூபி கடந்த ஒரு வருடமாக சமையல் செய்து சாப்பிட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து நீதிபதி முன்னிலையில் சமையல் அறையைத் தோண்டி மொகமத் சடலம் எடுக்கப்பட்டது. உடலில் எஞ்சி இருந்த எலும்புகள், முடிகள் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. ரூபியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து ரூபியிடம் விசாரித்த போது, ரூபியும், அவரது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தனர். கணவர் மொகமத்துடன் வேலை செய்த வகேலாவுடன் ரூபிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இத்தொடர்பு மொகமத்திற்குத் தெரிய வந்ததால் ரூபியை மொகமத் அடித்து உதைத்துள்ளார். அதனைத் தொடர்ந்தே ரூபியும், அவரது காதலனும் சேர்ந்து இரவில் மொகமத் கழுத்தை அறுத்து கொலை செய்து சமையல் அறையில் புதைத்ததாக ரூபி தெரிவித்துள்ளார். உடலைப் புதைக்க உதவிய இரண்டு பேரும் பிடிபட்டுள்ளனர்.
லிவ் இன் பார்ட்னர் படுகொலை
இதே போன்று சூரத்தில் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய பெண்ணைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து ரோட்டில் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சூரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொசம்பா என்ற இடத்தில் சூட்கேஸ் ஒன்று ரயில்வே மேம்பாலம் அருகில் கிடந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது பெண் ஒருவரின் உடல் இருந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் காஜல் (22) என்று தெரிய வந்தது. அவரை ரவி சர்மா என்பவர் கொலை செய்திருந்தார்.
போலீஸாரின் விசாரணையில் ரவியும், காஜலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் நண்பர்களாகி இருக்கின்றனர். காஜலுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காஜல் டெல்லிக்குச் சென்றார். அங்குதான் ரவி சர்மாவும் ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்யும்படி காஜல் நிர்ப்பந்தம் செய்து வந்துள்ளார்.
இதனால் ரவி சர்மா குஜராத் மாநிலம் கொசம்பாவிற்கு வந்தார். அங்கு வந்த பிறகு காஜல் நம்பரை ரவி பிளாக் செய்துவிட்டார். ஆனால் ரவியின் நண்பர்கள் மூலம் அவரைத் தொடர்பு கொண்ட காஜல் தன்னைத் திருமணம் செய்யவில்லையெனில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து ரவியின் நண்பர்கள் அவர் இருக்கும் இடத்தைத் தெரிவித்தனர். உடனே காஜல் தனது குழந்தையுடன் கொசம்பாவிற்கு வந்து ரவியுடன் சில நாட்கள் தங்கி இருந்தார்.
இங்கு வந்த பிறகும் அடிக்கடி தன்னைத் திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் காஜலை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ரவி போலீஸில் தெரிவித்துள்ளார்.
கொலை செய்தபோது காஜல் மகன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரூ.800க்கு டிராலி பேக் ஒன்று வாங்கி வந்து அதில் உடலை அடைத்து அங்குள்ள ரயில்வே பாலத்திற்கு அருகில் போட்டுவிட்டு காஜலின் மகனை அழைத்துக்கொண்டு, பரிதாபாத் சென்று தனது நண்பர் வீட்டில் ரவி வசித்து வந்துள்ளார். அவரைக் கண்டுபிடித்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



















