தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில...
டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணை இரவில் மிரட்டி கொள்ளை; போலீஸ்காரர் மகன் உடந்தை - கோவையில் அதிர்ச்சி
கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கடந்த நவம்பர் 2-ம் தேதி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அதே நாள் கோவையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 25 வயது பெண் கோவையில் ஒரு விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
அவருக்கு டேட்டிங் ஆப் மூலம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தருண் (28) என்கிற இளைஞர் பழக்கமாகியுள்ளார்.
கடந்த 2-ம் தேதி மாலை தருண் தன் எஸ்யூவி காரில் அந்த பெண்ணை, புறநகர் பகுதியான காகாசாவடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு செல்லும் வழியிலேயே தருணின் நண்பர் தனுஷ் (28) காரில் ஏறியுள்ளார். அப்போது திடீரென போட்டோ எடுத்து, அந்தப் பெண்ணை மிரட்டி அவரின் செயின், மோதிரம், பிரேஸ்லைட் உள்ளிட்ட 3 பவுன் மதிப்பிலான நகையை பறித்து, யுபிஐ பரிவர்த்தனை மூலம் ரூ.90,000 வாங்கியுள்ளனர்.
பிறகு அவரை இரவு 11 மணியளவில் சிங்காநல்லூர் அருகே இறக்கிவிட்டுள்ளனர். தாமதமாகிவிட்டதால் விடுதி செல்ல முடியாது என்று அந்த பெண் கூறியதற்கு, அவரின் செல்போனை வாங்கி ரூம் புக் செய்து அனுப்பி சென்றுள்ளனர்.

அறைக்கு வந்ததும் இந்த தகவலை பெண் தன் குடும்பத்தினரிடம் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தருண் மற்றும் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் தனுஷின் தந்தை காவல்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இருவரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















