` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் ல...
'2 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் காத்திருந்தால்...' - அரசியல் கட்சிகளின் பரப்புரை நெறிமுறைகள்!
அரசியல் கட்சிகளின் பரப்புரை கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்திருந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் பரப்புரைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
போராட்டம் நடத்த எத்தனை நாட்களுக்கு முன்னதாக மனு கொடுக்க வேண்டும்?
அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்கள் முன்பாகவும் 15 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத மற்ற இடங்களுக்கு 21 நாட்களுக்கு முன்பாகவும் 30 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.
முதலுதவி மையங்கள், அவசரகால மருத்துவ உதவிகள், கூட்டத்தை ஒழுங்கப்படுத்தும் தன்னார்வலர்கள் விவரங்கள் மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.

நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தங்கள் கட்சி அமைப்பின் இரண்டு மூத்த நிர்வாகிகளை கீழ்கண்ட அம்சங்களுக்கு தனித்தனியாக நியமித்து அவர்களது விபரங்களை குறிப்பிட வேண்டும்.
கூட்டத்தினரின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு படுத்துவதற்கு ஒருவர்.
அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு ஒருவர்.' என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கான நிபந்தனைகள் என்னென்ன?
அமைப்பாளர்கள் குறிப்பிட்டதை விட 50 சதவீதத்திற்கு அதிகமாக கூட்டம் கூடினால் அது தீவிர விதிமீறலாக கருதப்பட்டு காப்புத்தொகை பிடித்தம் மட்டும் இன்றி சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
நிகழ்ச்சிக்கு முன்பாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ ஆகியவை பொதுவாக மூன்று மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் எனினும் நிகழ்ச்சியின் தன்மையை பொறுத்து காவல் உட்கோட்ட அதிகாரி அதிகபட்ச கால அளவை முடிவு செய்யலாம்.

கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் முடிவுற்றாலும் கூட்டத்தினர் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேடை பந்தலின் உறுதித் தன்மை, மின்சார உபகரணங்கள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை தொடர்பான சான்றிதழை மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பொறியாளிடமிருந்து பெற்று நிகழ்ச்சிக்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு கொடிக்கம்பங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அமைக்கப்பட வேண்டும்.
இடத்தின் கொள்ளளவை விட அதிக அளவில் கூட்டம் கூடினால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தடுப்புகள் கயிறுகள் மூலம் தனி இடத்தில் அவர்களை ஒழுங்கு படுத்திட வேண்டும்.
நிகழ்ச்சி நடத்துவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும்?
இடத்தின் கொள்ளளவு, பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்தம் அவசரகால ஏற்பாடுகள் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு காவல் உட்கோட்ட அதிகாரி மனுவை பரிசீலனை செய்வார்.
கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும்.
அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சி நடத்தப்படும் இடம், கூட்டத்தில் கலந்து கொள்வோரின் விவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல் உட்கோட்ட அதிகாரி அந்நிகழ்ச்சியை குறைந்த ஆபத்து மிதமான ஆபத்து அதிக ஆபத்து என வகைப்படுத்த வேண்டும்.
மனு நிராகரிக்கப்படும்பட்சத்தில் அமைப்பாளர்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் புதிய மனுவாக கொடுக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் ஒரே இடத்திற்கு ஒரே நேரத்திற்கு பெறப்பட்டால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அரசியல் கட்சியை பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்ன?
நிகழ்ச்சி நடைபெறும் போது நிகழ்ச்சி பாதுகாப்பு கண்காணிப்பு குழுக்கள் பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு நிகழ்ச்சியை கண்காணிக்க வேண்டும்.
காவல்துறை அனைத்து நிபந்தனைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சுகாதாரத்துறை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பில் ஆம்புலன்ஸ்கள் முதலுதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கண்காணிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் மேடை இதர தற்காலிக கட்டுமானங்களின் உறுதித் தன்மைக்காக நிகழ்ச்சி அமைப்பாளரால் செய்யப்பட்டுள்ள ஏற்பட்டினை கண்காணிக்க வேண்டும்.

மின்சார வாரியம் மின் இணைப்புகள் மின் சாதனங்கள் தற்காலிக மின் கம்பிகளின் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அமைப்பாளர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அவசர கால தயார் நிலையை கண்காணிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் அமைப்பாளர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி கழிவறை வசதி துப்புரவு பணிகள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
நிகழ்ச்சிகளை ஆபத்துக்களை பொறுத்து மூன்று வகையாக பிரித்துள்ளனர்.
1. குறைந்த ஆபத்து
2. மிதமான ஆபத்து
3. அதிக ஆபத்து
குறைந்த ஆபத்து என்றால் 200 பேருக்கு ஒரு காவலர்.
மிதமான ஆபத்து என்றால் நூறு பேருக்கு ஒரு காவலர்.
அதிக ஆபத்து என்றால் 50 பேருக்கு ஒரு காவலர்

5000 பேர் முதல் 10000 பேர் வரை கூடினால் 1 லட்சமும், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் 3 லட்சமும், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூட்டினால் 8 லட்சமும் காப்புத்தொகையாக கட்ட வேண்டும்.
50 ஆயிரம் பேருக்கு மேல் என்றால் காப்புத்தொகையாக 20 லட்சம் ரூபாயை கட்ட வேண்டும்.'
பரப்புரைகளை நெறிப்படுத்த இந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

















