Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
"நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம்" - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகனான ஜோஹ்ரானின் இந்த வெற்றி டொனால்டு ட்ரம்புற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டொனால்டு ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. முதல் முறையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை மாநகராட்சிக்கும் வரும் ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் மேயராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''அமெரிக்காவில் நடந்திருப்பது வாக்கு ஜிஹாத் ஆகும்.
நியூயார்க் நகரில் காணப்பட்ட அதே வகையான அரசியலை மும்பையிலும் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எந்த கானையும் மும்பையில் மேயராக அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் யாராவது கான்களைத் திணிக்க முயன்றால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
சிலர் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் பாதையை கையில் எடுத்துள்ளனர். இதற்கு முன்பு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்ற இதுபோன்ற சக்திகளிடமிருந்து மும்பையைப் பாதுகாப்பது அவசியம். மத நல்லிணக்கத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் யாராவது தேச விரோத நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றால், நாங்கள் அவர்களை எதிர்ப்போம்.
மும்பையின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்காக நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம். நகரம் முழுவதும் வந்தே மாதரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு குடிமகனுக்கும் இதைப் பெருமையுடன் பாட உரிமை உண்டு. மும்பை நகரத்தின் சமூக மற்றும் கலாசார அடையாளத்தை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்று கூறினார்.
மகாராஷ்டிராவில் கடந்த பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷன் தற்போது அறிவித்து இருக்கிறது. அதுவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து முதல் கட்டமாக டிசம்பர் 2ம் தேதி நகராட்சி கவுன்சில் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.















