விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி - பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண...
விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி - பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்!
கேரளா சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தென்காசியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இவர், கேரளா மாநிலத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது வையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பந்தல்குடி வழக்கு தொடர்பாக பாலமுருகனை அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, கேரளா ஜெயிலில் இருந்து, பந்தல்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன், காவலர்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோர் அழைத்து வந்தனர். அதன் பிறகு பாலமுருகனை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு கேரளா வையூர் ஜெயிலில் அடைப்பதற்காக சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் சென்றனர். வையூர் ஜெயில் முன் சென்றபோது, பாலமுருகன் இயற்கை உபாதைக்கு செல்வதாக கூறி, காவலுக்கு சென்ற போலீசாரிடம் இருந்து தப்பி சென்றார்.

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பந்தல்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன், காவலர்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் தப்பிய கைதி பாலமுருகனை பந்தல்குடி மற்றும் அருப்புக்கோட்டை போலீசார் கேரளா பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

















