விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி - பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண...
"'ஆட்டோகிராப்' படம் பார்த்துட்டு பாலுமகேந்திரா சார் சொன்ன அந்த வார்த்தை" - சேரன் உருக்கம்!
சேரன், இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்த ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது.
2004-ம் ஆண்டு வெளியாகி பள்ளி, கல்லூரி, இளமை பருவங்களின் காதல் அனுபவங்களைப் பேசிய இப்படம் 100 நாள்களுக்கு மேல் திரையில் ஓடியது. ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய், இசை அமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோருக்கு மூன்று தேசிய விருதுகள் விருது கிடைத்தது.

இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது 'ஆட்டோகிராப்'.
இதையொட்டி இன்று சென்னையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் சேரன், "'ஆட்டோகிராப்' படம் வெளியாவதற்கு முன்பே முதன் முதலில் பார்த்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் மட்டும் தனியாக உட்கார்ந்து படம் பார்த்தார். நான் படம் முடியும் வரை ஒரு ஓரமாக நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
படம் முடிந்து ரொம்ப நேரமாகியும் பாலுமகேந்திரா எழுந்திருக்கவில்லை. மெதுவாக அருகில் சென்று 'சார்' என்று கூப்பிட்டேன். உடனே என்னைப் பார்த்து அருகில் உட்காரச் சொல்லி, தன் கையால் என் தோளை இறுக்கிப் பிடித்தபடி, 'தமிழ் சினிமா உன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட போறாங்க'னு சொல்லி என்னோட உச்சி மண்டையில முத்தம் வைத்தார். அதை நான் என்றும் மறக்க மாட்டேன்.

'ஆட்டோகிராப்' படத்தை வெறும் லாபத்திற்காக பழைய படத்தை அப்படியே ரீ-ரிலீஸ் செய்யவில்லை. படத்தில் 15 நிமிடம் குறைத்து, கலர் எல்லாம் இந்த காலத்திற்கு ஏற்ப சரி செய்து, பின்னணி இசைகளில் எல்லாம் வேலை பார்த்து லட்சங்களில் செலவு பண்ணி ரீ-ரிலீஸ் பண்ணுகிறோம். படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என பணத்தை செலவு செய்து அவர்கள் ரசிக்கும்படி புதுமைகளுடன் ரீ-ரிலீஸ் செய்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.

















