விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி - பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண...
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (04.11.2025) மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் இடது சாரி மாணவர் அமைப்புகள் (AISA, SFI, DSF) ஓர் அணியாகவும், வலதுசாரி மாணவர் அமைப்பு (ABVP) ஓர் அணியாகவும் தேர்தலில் பங்கேற்றன. இரண்டு நாட்களாக நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை தற்போது முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர், துணைச்செயலர் என நான்கு பதவிகளைக் கொண்ட இத்தேர்தலில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று நான்கு பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகளில் ஏற்பட்ட உடைவின் காரணமாக வலதுசாரி மாணவர் துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை தலைவர், துணைத்தலைவர், துணைச் செயலர் பதவிகளை முறையே இடதுசாரி மாணவர்களான அதிதி, கோபிகா, டேனிஷ் அலி என்னும் மூன்று பெண்கள் கைப்பற்றியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவியை சுனில் என்னும் இடதுசாரி மாணவர் கைப்பற்றியுள்ளார்.

நான்கில் மூன்று பெண்கள் மாணவர் சங்க பொறுப்புகளில் வெற்றி பெறுவது இந்தத் தேர்தலில் கூடுதல் சிறப்பாகும். துணைத்தலைவர் பதவிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட கேரளாவைச் சேர்ந்த கோபிகா என்பவர் மற்றவர்களை விட மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஒவ்வொரு துறைகளுக்குமான கவுன்சிலர் பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர்களே பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றியடைந்துள்ள மாணவர்கள் அனைவரும் பெண்கள், இஸ்லாமிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றும் அனைத்து மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும் உறுதி பூண்டனர். மேலும், கல்விசார் நிதிக் குறைப்புக்கு எதிராகவும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை அதிகப்படுத்தவும் செய்வோம் என்றனர். மேலும் அறிவுப்புலத்திலும், போராட்டத்திலும் பெயர் போன டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை மீண்டும் இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்றனர்.

















