கோவை மாணவியின் கண்ணீரே கடைசியாக இருக்கட்டும்! | #HerSafety
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ஆம் தேதி இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படி பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளும், வன்முறைகளும் தமிழகத்தில் நடப்பது இது முதல் முறை அல்ல.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த 2024-25ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் பாலியல் வழக்குகள் இரண்டாயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.
ஆனால் தண்டனை கிடைத்த வழக்குகள் 30% கூட இல்லை.

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மட்டுமன்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தமிழகத்தில் நிறையவே அரங்கேறியிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சமீபமாக நடந்த சில அதிர்ச்சிகர சம்பவங்களின் தொகுப்பு இங்கே...
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலியே, நண்பருடன் இருந்த ஒரு பெண்ணை, ஞானசேகரன் என்ற நபர், பாலியல் வன்கொடுமை செய்தார்.
சென்னையின் பிரதான இடத்தில், அதுவும் பல்கலை., வளாகத்தில் நடந்த இந்த கொடுமை, தமிழகத்தையே உலுக்கியது.
குற்றம் செய்த ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரம் மற்றும் காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த FIR தகவல் வெளியில் கசிந்ததை தொழில்நுட்ப கோளாறு என்று கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் கூறியது ஆளும் திமுகவிற்கு கீழ் செயல்படும் காவல்துறை.

திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு
கடந்த ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார்.
மதியம் பள்ளி முடிந்து, ஆரம்பாக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, அதே பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவரை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, தப்பியோடினார்.
இந்த வழக்கில் ராஜூ பிஸ்வகர்மா என்ற வட மாநிலத்தவரை காவல்துறை கைது செய்துவிட்டது.
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை
கடந்த ஜுலை மாதம் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது சொந்த ஊரான சித்தூர் செல்வதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்து கோயம்புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணித்தார்.
அப்போது, ரயிலில் உள்ள கழிவறைக்கு கர்ப்பிணி சென்றபோது அங்கிருந்த ஒரு நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணியை வேலூர் கே.வி குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
பின்னர் ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுவிட்டார்.
ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஓடும் ரயிலில் எந்தவித அச்சமும் இல்லாமல் கர்ப்பிணி பெண் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அந்தளவுக்குத்தான் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணம் இருக்கிறது.
திருவண்ணாமலை பாலியல் வழக்கு
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார் ஏற்றிய சரக்கு வாகனம் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளது.
அந்த வாகனத்தின் ஓட்டுநரின் உறவினர்களான தாயும், மகளும் அவருடன் அண்ணாலையார் கோயிலுக்கு செல்வதற்காக உடன் வந்துள்ளனர்.
ஏந்தல் புறவழிச்சாலை அருகே நள்ளிரவு 2 மணியளவில் வந்தபோது ரோந்து போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
மேலும், பெண்கள் இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, ஏந்தல் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாய் கண்முன்னே சுமார் 25 வயதுள்ள இளம் பெண்ணை சுரேஷ்ராஜ் மற்றும் சுரேந்தர் ஆகிய அந்த இரண்டு போலீஸாரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், அவர்களை புறவழிச்சாலை அருகே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் அழுதுகொண்டிருந்த இரண்டு பெண்களையும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளே இப்படி நடந்துகொள்ளும் அளவிற்குத்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.
ரிதன்யா வரதட்சணை வழக்கு
திருமணமான 78 நாள்களில் ரிதன்யா வரதட்சணைக் கொடுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.
ரிதன்யா இறப்பதற்கு முன் அவரது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோவாக தனது இறப்பிற்கான வாக்குமூலத்தை அனுப்பி விட்டு உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து ரிதன்யா பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கணவர் கவின் குமார், சித்ராதேவி மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் கட்சி பலத்தைப் பயன்படுத்திக்கொண்டு தவறு செய்த மூவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இது போன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் எத்தனையோ ரிதன்யாக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் திருப்பூரில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கர்ப்பமாக்கிய பெண்ணின் தந்தை மற்றும் இளைஞர் ஆகிய இருவரை போலீஸார் கைது என்ற செய்தி வெளியாகின்ற அளவுக்கான அவலநிலைதான் தமிழகத்தில் இருக்கிறது.
இப்படி வெளியில் தெரிந்தும், தெரியாமலும், பேசப்படாமலும் எத்தனையோ பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு?
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘அப்பா என்று அழைப்பது ஆனந்தமாக உள்ளது’ என்று கூறும் ஸ்டாலின் அவர்களே... மகள்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்க நேரம் இல்லையா?

‘மகளிர் சுய உதவிக்குழு’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘பாதுகாப்பான தோழி விடுதிகள்’ என பெண்கள் முன்னேற்றத்திற்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று சொல்கிறீர்களே? பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க வலுவான, திட்டமோ, சட்டமோ வைத்திருக்கிறீர்களா?
ஒரு பெண் போலீசில் புகார் கொடுக்கும்போது, அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிற சூழல் இந்த அரசில் உண்டா?
பெண் பாதுகாப்பு குறித்து பேசும் நீங்கள் பெண்ணுக்கு எதிராக குற்றம் நடந்தால் மௌனம் காப்பது ஏன்?
பாதுகாப்புக்காக வேலை செய்யுங்கள்!
இது பெண்களுக்கான அரசு. பெண்களின் முன்னேற்றத்திற்கான அரசு என மேடைதோறும் முழங்கினால் மட்டுமே போதாது முதலமைச்சரே.
எந்நேரத்திலும் எச்சூழலிலும் பெண்கள் சுதந்திரமாக சௌகரியமாக தங்களுக்கு விருப்பப்பட்டதை பாதுகாப்பு உணர்வோடு செய்ய முடியும் என்பதுதான் உண்மையான பெண்கள் முன்னேற்றம்.

அதை உங்கள் அரசு உறுதிப்படுத்த தவறிவிட்டது. அந்த கோவை மாணவியின் கண்ணீராவது கடைசியாக இருக்கட்டும்!
கடந்த ஆட்சியிலும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை போன்ற கொடூரங்கள் அரங்கேறி மக்களை பதைபதைக்க வைத்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை மாறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்வது மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்துகிறது...
இனியாவது கொஞ்சம் அக்கறையோடு இறங்கி பெண்கள் பாதுகாப்புக்காக வேலை செய்யுங்கள்!














