Job Interview: "என்னை நேர்காணல் செய்தவர் மனிதரே இல்லை" - AI குழப்பத்தில் ரெட்டிட...
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் ஜெயராம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், இதுகுறித்து புகார் செய்தும் தலைமையாசிரியை பொற்செல்வி, உதவி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என 7 மாணவிகள் சைல்ட் லைனிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தனர்.
புகாரில், "ஆசிரியர் ஜெயராம் மூலம் எங்களுக்கு பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை உடந்தையாக உள்ளனர். வகுப்பறையில் எந்நேரமும் ஆபாசமாகப் பேசுகிறார்கள். மாணவர்கள் வகுப்புக்கு மது அருந்திவிட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, வகுப்பறையிலிருந்த கண்கானிப்பு கேமிராக்களை வெளியில் மாட்டினார்கள். மாணவிகளையும், பெற்றோர்களையும் ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கே படியுஙகள் என்று சொல்கிறார்கள். ஆசிரியர் ஜெயராம் மாணவிகளைத் தொடுவது, மொபைலில் ஆபாச வீடியோக்களை காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்" என்று தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஜெயராம், தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த மதுரை திலகர் திடல் மகளிர் காவல்துறையினர், இப்புகார் குறித்தும் இப்பள்ளி ஆசிரியர்கள் மீதான மேலும் சில புகார்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்














