2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்
தூத்துக்குடி: ”லேசாகதான் வெட்டினேன்; ஆனால்” - கொலை வழக்கில் சரண்டரான ரவுடி இசக்கிமுத்து வாக்குமூலம்
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் – திருச்செந்தூர் சாலையோரம் கடந்த மாதம் 17-ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த அருண் செல்வம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிவந்திபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட அருண் செல்வத்தின் அண்ணன் கார்த்திக்கிற்கும், ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த பிரபல ரவுடியான இசக்கிமுத்து என்பவருக்கும் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.

இந்த முன்விரோதத்தின் காரணமாக இசக்கிமுத்துவின் நண்பரான வள்ளிமுத்து என்பவரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த இசக்கிமுத்துவை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். இதனையடுத்து அருண் செல்வம் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து மீது ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கும் நிலுவையில் இருந்ததால், அன்றைய தினமே சென்னை போலீஸார் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அருண் செல்வம் கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்திட சிவந்திபட்டி காவல் நிலைய போலீஸார், அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸாரின் விசாரணையில் பேசிய அவர், “கடந்த ஆண்டு அருண் செல்வத்தின் ஊர் வழியாக நான் சென்றபோது திருட வந்ததாகக் கூறி ஊர் மக்களுடன் சேர்ந்து என்னை போலீஸில் பிடித்துக் கொடுத்தார். இதனால் எனக்கும் அவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் சமீபத்தில் கார் கண்ணாடி உடைப்பு பிரச்னையும் ஏற்பட்டதால் அவர் மீது கோபம் இன்னும் அதிகமானது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் 17-ம் தேதி டாஸ்மாக் கடையில் அருண் செல்வத்தைப் பார்த்தேன்.
அவரை அரிவாளால் லேசாக வெட்டி மிரட்டி அனுப்பலாம் என நினைத்து லேசாகத்தான் வெட்டினேன். ஆனால், அந்த அரிவாள் வெட்டில் அவர் உயிரிழந்தது பிறகுதான் தெரிந்தது. உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” என்றார்.
இசக்கிமுத்து மீது 4 கொலை வழக்குகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.















