"திமுக-வை அழிக்க SIR எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!" - முதல்வர் ...
’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்
'கோவா மைல்ஸ்' என்ற செயலி மூலம் கார் புக் செய்த ஜெர்மன் சுற்றுலா ஜோடியை உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முயன்றதற்காக அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஆன்லைனில் புக் செய்து பயணித்த டாக்ஸின் ஓட்டுநருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் கோவாவில், உள்ளூர் டாக்சி ஓட்டுநர்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த பயண வீடியோ பதிவரான அலெக்ஸ் வெல்டர், தன் தோழியுடன் கோவாவின் பட்னெம் பகுதியில் பயணம் செய்ய முதலில் அங்கு இருக்கும் ஆட்டோவை நாடியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் ரூ. 500 கட்டணம் கேட்ட நிலையில், 'கோவா மைல்ஸ்' செயலியில் அதே பயணத்திற்கு ரூ. 300 மட்டுமே காண்பித்துள்ளது .
இதனால், அலெக்ஸ் செயலி மூலமாக காரை முன்பதிவு செய்துள்ளார். இதனையறிந்த உள்ளூர் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆத்திரமடைந்து சுற்றுலா பயணி பயணித்த காரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
உள்ளூர் ஓட்டுநர்கள் தங்களை வீடியோ எடுப்பதாகக் கூறி, கோவா மைல்ஸ் ஓட்டுநர் தனது காரின் நம்பர் பிளேட்டை மறைக்குமாறு அலெக்ஸிடம் கெஞ்சியுள்ளார். இந்தச் சூழல் தங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அலெக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும், காவல்துறையினர் அந்தக் காரை மறித்து கோவா மைல்ஸ் ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்திருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில், அந்த அபராதத் தொகையை அலெக்ஸே செலுத்தியுள்ளார்.
கோவாவில் இதுபோன்று நடப்பது முதல் முறையல்ல. கடந்த அக்டோபர் மாதம் மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயா அகர்வால் என்ற பெண், உள்ளூர் ஓட்டுநர்களின் அச்சுறுத்தல் காரணமாக தான் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தனது உடமைகளைத் தெருவில் இழுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
















