தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவ...
Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?
Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு. தில்லைவள்ளல்

சில வகை ரத்த அழுத்த மாத்திரைகள், தாம்பத்ய வாழ்க்கையை ஓரளவுக்கு பாதிக்கலாம். ஆனால், இது அனைவருக்கும் அல்லது அனைத்து மாத்திரைகளுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.
சில பிபி மாத்திரைகள் உடலின் ரத்த ஓட்டத்தையும் ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு (ED - Erectile Dysfunction) அல்லது பாலியல் ஆர்வம் குறைவு ஏற்படலாம்.
பெண்களுக்கு பாலியல் உந்துதல் குறைவு அல்லது பெண் உறுப்பில் வறட்சி (Dryness) ஏற்படலாம். சிலருக்கு மாத்திரைகளால் மனச்சோர்வு, மன அழுத்தம், அல்லது படபடப்பு காரணமாகவும் மறைமுகமாகப் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
நீண்ட காலமாகப் பயன்படுத்தும் பிபி மருந்துகள், பொதுவாகப் பாலியல் செயல்பாட்டை பாதிக்கலாம். நவீன மருத்துவ முன்னேற்றத்தில் கிடைக்கும் புதிய வகை பிபி மருந்துகள் பாலியல் ஆர்வத்தையோ, செயல்பாட்டையோ பாதிக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் கிடைக்கின்றன.
ஒருவேளை, பிபி மாத்திரைகளால் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக முக்கியம்.

நீங்களாகவே மருந்துகளை நிறுத்தவோ அல்லது கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடவோ கூடாது. மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, வேறு மருந்துகளைப் பரிந்துரைப்பார். தவிர, சிலருக்கு பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும் சில சிறப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
மருந்துகளால் அல்லாமல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தலாம். அந்த வகையில், பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், நட்ஸ், சியா மற்றும் பூசணி விதைகள், கொழுப்புள்ள மீன் (Fatty Fish), முட்டை, இறைச்சி, கடல் உணவுகள், காளான்கள், கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள், டார்க் சாக்லேட், மாதுளை, தர்பூசணி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, துத்தநாகம் (Zinc) சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
பேக்கரி உணவுகள், அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை, சோடியம் (உப்பு) மற்றும் எண்ணெய் நிறைந்த வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மன அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். பிடித்த வேலைகளைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும்.

வொர்க் - லைஃப் பேலன்ஸ் கடைப்பிடிக்கப்பட வேண்டும். போதுமான அளவு தூக்கம், குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை அவசியம். புகை மற்றும் மதுப் பழக்கங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நாள்பட்ட நோய்கள், ஆண் உறுப்பில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், இதற்குச் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















