செய்திகள் :

'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

post image

தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. 'டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..' என்கிறார் மருத்துவர்.

ஜெனோவா
ஜெனோவா

'நாலு மாசமா பொழைப்பு இல்லாம ரோட்டுல நிக்குறோம். குடும்பமே பட்டினில கிடக்கு. அதைவிட இதெல்லாம் ஒரு டென்ஷனா மேடம்...' என்கிறார் ஜெனோவா. அவரின் குரலில் அத்தனை வேதனை. எவ்வளவு போராடியும் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்கப்படவில்லையே என்கிற விரக்தி. அம்பத்தூரில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அந்த நான்கு பெண்களுமே இதே மனநிலையில்தான் இருந்தனர். இவர்களெல்லாம் சில வாரங்களுக்கு முன்பு சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே தனியார்மயமாக்கலை எதிர்த்து போராடிய தூய்மைப் பணியாளர்கள்.

அங்கு நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட பிறகும், சென்னையை சுற்றி பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி கைதாகியிருந்தனர். தனியார் நிறுவனத்துக்கு கீழ் வேலைக்கு செல்லமாடோம் என்கிற அவர்களின் போராட்டம் 100 நாட்களை கடந்திருக்கிறது. இப்போது காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியிருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் கீதா, பாரதி, வசந்தி, ஜெனோவா என நான்கு பெண்கள் போராட்டத்தையும் தொடங்கிவிட்டனர்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து நகரமாட்டோம், என உறுதியாகக் கூறும் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். 'மழை, புயலு வெள்ளம்னு எல்லாத்தப்புவும் வேலை பார்த்திருக்கோம். புயல் அப்போலாம் வேலைக்கு போக பஸ்ஸூ கூட இருக்காது. நடந்தே போவோம். கொரோனா அப்போ எந்த கஷ்டமும் பார்க்காம ஒவ்வொரு வீட்டு குப்பையையும் அள்ளிருக்கோம். இப்போ எங்களையே குப்பையா தூக்கி வீசிட்டாங்க' எனப் பேசத்தொடங்கினார் கீதா.

கீதா
கீதா

'பன்னிரெண்டு வருசமா வேலை செய்யுறேன் தம்பி. வேலைக்கு சேர்ந்தப்போ எனக்கு 27 வயசு. குடும்ப சூழ்நிலையினாலதான் இந்த வேலைக்கு வந்தேன். என் வீட்டுக்காரரு வண்டி ஓட்டிட்டு இருந்தாரு. திடீர்னு அவருக்கு மூளையில கேன்சர் கட்டி. அடிக்கடி வலிப்பு வரும். கவர்மெண்ட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்துதான் வைத்தியம் பார்த்தேன். குணமில்லாத மனுசனால எப்படி வேலைக்கு போக முடியும்? ஆனா, எனக்கு ரெண்டு பொம்பளை புள்ளைங்க. அண்ணன் தம்பினு எல்லாருமே அன்றாடங்காச்சிங்க. நமக்கு கைகொடுத்து உதவுறதுக்கு ஆளுங்க கிடையாது.

அப்படி ஒரு நிலைமையிலதான் 9000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தேன். அதை வச்சுதான் வீட்டுக்காரருக்கு மருந்து மாத்திரை வாங்கில் கொடுப்பேன். புள்ளைங்களையும் படிக்க வச்சேன். 7 வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்காரரும் இறந்துட்டாரு. ரெண்டு புள்ளைங்களையும் படிக்க வைக்க வழியில்ல. அதனால மூத்த பொண்ண 9 ஆம் க்ளாஸோட நிறுத்திட்டேன். ரெண்டாவது பொண்ண மட்டும் படிக்க வச்சேன். அந்த புள்ள இப்போ ஒரு டிகிரி முடிச்சிட்டா. இன்னொரு டிகிரி படிக்கணும்னு அவளுக்கு ஆசை. வேலை இருந்திருந்தா கடன உடன வாங்கியாச்சு படிக்க வச்சிருப்பேன். இப்போ அதுவும் முடியல.

கீதா
கீதா

படிச்ச படிப்புக்கு அந்த புள்ளையால நல்ல வேலைக்கும் போக முடியல. வேலை கிடைக்க மாட்டக்குது. என் ஒருத்தியோட சம்பளத்தை வச்சுதான் குடும்பமே ஓடிட்டு இருந்துச்சு. இப்போ அதுவும் இல்ல. . திடீர்னு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போங்கன்னு சொல்றாங்க. இத்தனை வருசம் வேலை பார்த்துட்டு இப்போ வாங்குறத விட குறைவான சம்பளத்துக்கு அந்த கம்பெனிக்கு வேலைக்கு போக சொன்னா நியாயமா? அதுக்கு நியாயம் கேட்டு போராடுனா எங்களை விரட்டி விரட்டி கைது பண்றாங்க. நாலு மாசமா ஒரு வேளை மட்டும் ரேஷன் அரசியை கஞ்சியா காய்ச்சி குடிச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். செத்தாலும் பரவால்ல. எங்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேத்தாம நாங்க இங்க இருந்து நகரமாட்டோம்.' என்கிறார்.

ஜெனோவா
ஜெனோவா

ஜெனோவாவுக்கு வயது 52. அவரது கணவர் ஒரு பெயிண்டர். ஒரு முறை உயரமான கட்டடத்தில் ஏறி பெயிண்ட் அடிக்கையில் தவறி விழுந்து கை, கால் முறிந்திருக்கிறது. அதன்பிறகு அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. 13 ஆண்டுகளாக தூய்மைப் பணி பார்க்கும் ஜெனோவாவின் வருமானத்தில்தான் அவரின் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது அதுவும் இல்லை.

'ஜூலை கடைசி வாரத்துல புதுசா யூனிபார்ம்லாம் கொடுத்தாங்கப்பா. ரெண்டு ரெண்டு செட்டா கொடுத்தாங்க. நாங்களும் சந்தோஷமா வாங்கிட்டு வந்தோம். ஆனா, ஆகஸ்ட்டு ஒன்னாம் தேதில இருந்து உங்களுக்கு இங்க வேலை கிடையாது. ராம்கி கம்பெனிக்கு போங்கன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியல. அந்த குழப்பத்தோட எங்க வேலைய தக்க வச்சுக்கத்தான் ரிப்பன் பில்டிங் வெளிய உட்காந்தோம். ரெண்டு நாள் கத்திட்டு எந்திரிச்சு போயிருவோம்னு சொன்னாங்க. ஆனா, நாங்க 13 நாள் இராத்திரி பகலா உட்காந்தோம்.

ஜெனோவா
ஜெனோவா

நடுராத்திரில கைது பண்ணாங்க. நாங்க அவ்ளோ பேரும் பொம்பளைங்க. எங்களை வேளச்சேரில நடுராத்திரில நடுரோட்ல இறக்கி விட்டாங்க. அப்புறம்தான் ஒரு மண்டபத்துல அடைச்சாங்க. அன்னையில இருந்து தொடர்ச்சியா போராடுறோம். எங்க மனு கொடுக்க போனாலும் கைது பண்றாங்க. கடைசியா மெரினா கடல்ல இறங்குனோம். இடுப்பளவு தண்ணி, பயமா இருந்துச்சு. ஆனாலும் இறங்கி போராடுனோம். அப்பவும் கைது பண்ணாங்க. நாலு மாசமா கஞ்சியையோ கூழையோ குடிச்சிட்டு கிடக்கோம். கந்து வட்டிக்கு வாங்கிதான் வாழ்க்கையை ஓட்டுறோம். கந்துவட்டிக்காரங்க என்னென்னமோ பேசுறாங்க. ஹவுஸ் ஓனருங்க திட்டுறாங்க. எவ்வளவோ பிரச்சனை.

எங்க மாமனாருக்கு 85 வயசு ஆவது. அவர் முழுக்க முழுக்க திமுகக்காரர். நாங்க வேற எதாச்சு கட்சிக்கு ஓட்டு போட்டா கூட திட்டுவாரு. 'நம்பிக்கையோட போய் உட்காருங்க. ஸ்டாலின் நல்லா பண்ணி கொடுப்பாரு'ன்னு அவர் ஆறுதல் சொல்லி அனுப்பிருக்காரு. நாங்க எதாச்சு ஆதங்கத்துல தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருங்க முதல்வர் ஐயா. உங்களுக்கு எங்க நியாயமெல்லாம் தெரியும். உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எதாச்சு பண்ணுங்கய்யா...' என்றார் கண்கள் குளமாக ஆற்றாமையோடு.

வசந்தி
வசந்தி

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 64 வது வார்டில் தூய்மைப் பணி செய்திருக்கிறார் 39 வயதான வசந்தி. இளம் வயதிலேயே திருமணம் ஆன அவருக்கு இப்போது கல்யாண வயதில் இரண்டு பெண்கள். நான்கு மாதமாக வேலையில்லாமல் எதிர்கொண்ட இன்னல்களை கண்ணீர் மல்க விவரித்தார். 'என் வீட்டுக்காரரு குடிகாரு. குடிச்சிட்டு படுத்துருவாரு. அவருக்கா விருப்பப்பட்டு வேலைக்கு போனா உண்டு. அதனாலதான் நான் இந்த வேலைக்கு வர வேண்டிய சூழல் வந்துச்சு. முதல் பொண்ணு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா.

அந்த பையன் சரியில்ல. இப்போ அவளும் ரெண்டு புள்ளைங்களோட எங்க கூடதான் இருக்கா. ரெண்டாவது பொண்ணு பேரு அகல்யா. செயிண்ட் பீட்டர்ஸ் காலேஜ்ல பி.ஏ.எக்கனாமிக்ஸ் படிச்சிட்டு இருந்தா. இப்போ ரெண்டாவது வருசம். அவளுக்கு 36000 ரூபாய் பீஸ். வேலையிருந்தா கடன் வாங்கிக் கூட கட்டியிருப்பேன். இப்போ பீஸ் கட்ட முடியாம அவ காலேஜ் போறதையே நிறுத்திட்டா. நாள் முழுக்க உட்காந்து அழுதிட்டு இருக்கா. நான் தான் குப்பை வாரி என் வாழ்க்கை இப்டியே தெருலயே போயிருச்சு. அவளாச்சு படிச்சு நல்ல நிலைமைக்கு வருவான்னு நினைச்சேன். இப்போ அதையும் பண்ண முடியல.' பேச முடியாமல் அழத் தொடங்கியவர் ஒன்றிரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு அழுகையை விழுங்கிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

வசந்தி
வசந்தி

'மாசம் 7500 ரூபாய் வீட்டு வாடகை. அதை கொடுக்க முடியல. ஹவுஸ் ஓனர் சண்டை போடுறாங்க. சரி வேற வேலைக்கு போலாம்னா அதுவும் கிடைக்க மாட்டக்குது. குப்பை பொறக்குனவங்களுக்கு வேலை கொடுக்க மாட்டோம்னு வெளிப்படையா சொல்றாங்க. அரசும் எங்களை ஒதுக்குது. இந்த சமூகமும் எங்களை ஒதுக்குது. நாங்க எங்கதான் போவோம். எங்களுக்கு தெரிஞ்ச வழியில போராடுறோம். இந்த தடவ கோரிக்கை நிறைவேறாம போராட்டத்தை கைவிடமாட்டோம். செத்தா கூட பரவால்ல...'. என்றார் உறுதியாக.

15 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மைப் பணி செய்ய வந்ததாக சொல்கிறார் திரு.வி.க நகரில் வேலை பார்க்கும் பாரதி. அப்போது 9000 ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். இடையில் அதை குறைத்து 6000 ரூபாய் ஆக்கியிருக்கிறார்கள். இப்போதுதான் ஒரு வருடமாக அடிப்படை ஊதிய உரிமையின்படி 23000 வாங்குகிறோம். அதையும் இப்போது இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் என வேதனைப்படுகிறார். 'நாங்க எங்க கூடி நின்னாலும் கைது பண்றாங்க. எவ்வளவோ போராடி பார்த்துட்டோம் முடியல. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. வீட்டுக்காரர் ஆட்டோ ஓட்டுறார். அவரு சரி கிடையாது. ஒரு வேளைதான் கஞ்சிய குடிச்சிட்டு இருந்தோம். அதனாலதான் இந்த வேலைக்கு வந்தோம்.

பாரதி
பாரதி

இந்த வேலையினாலதான் என் பொண்ணுங்களை ஸ்கூல் படிக்க வச்சேன். இப்போ ரெண்டும் ஜெயின் காலேஜ்ல படிக்குதுங்க. நீங்க நம்புவீங்களான்னு தெரியல. அந்த பொண்ணுங்களுக்கு தனிப்பட்ட பெர்சனல் விஷயங்களை கூட வாங்கிக் கொடுக்க முடியல. காலேஜ் பீஸ் கட்ட முடியல. யம்மா...தாயிங்களா பொறுத்துக்கோங்க வேலை கிடைச்சிரும். சம்பளம் வந்துரும்னு சொல்லி வச்சிருக்கேன். இன்னைக்கு கூட, 'அம்மா போராட்டத்துக்கு போறேன். உயிரோட வந்தா அம்மாவை பார்த்துக்கோங்க. இல்லைன்னா இந்த வேலையயாச்சும் முதலமைச்சர் உங்களுக்கு போட்டு கொடுப்பாரு. அதை வச்சு பிழைச்சு மேல வந்துருங்க'ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். முதல்வர் ஐயா...நாங்க எதாச்சு தப்பு பண்ணிருந்தா மன்னிச்சிருங்க. எங்க வேலையை மட்டும் கொடுத்துருங்க. எங்க குடும்பமெல்லாம் நாதியத்து நிக்குது...' என்றார் வேதனையுடன்.

போராடும் தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களின் பிரதிநிதிகள்தான் இவர்கள். அத்தனை பேருக்குமே தங்களின் பிள்ளைகளுக்கு கல்வி கொடுத்து ஆளாக்கி பார்த்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவாக இருக்கிறது. அவர்கள் பார்த்து வந்த வேலைதான் அதற்கான ஆதாரமாக இருந்திருக்கிறது. இப்போது நான்கு மாதங்களாக வேலை இல்லை. பல பிள்ளைகளின் கல்வி இடைநிற்றலை நோக்கி சென்றிருக்கிறது. போராடும் இந்தப் பெண்களின் கனவு மட்டுமல்ல, அவர்களது பிள்ளைகளின் வருங்காலமும் சிதைந்து கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் காவலனாக தன்னை சித்தரித்து பெருமிதப்பட்டுக் கொள்ளும் முதல்வரே, இப்போதாவது கொஞ்சம் செவி சாயுங்கள்!

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மா... மேலும் பார்க்க

"மெக்கா புனிதப் பயணம் சென்ற 42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்" - தவெக விஜய்

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

"தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது" - சொல்கிறார் வைகோ

சமத்துவ நடைபயணத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை நேர்காணல் செய்வதற்காக மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் 7,000 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளேன். தமிழகத்... மேலும் பார்க்க

பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு; கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா?

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஆர்.பி.உதயகுமார்-பி... மேலும் பார்க்க

`ரூ.250 கோடி சொத்து; அரண்மனை வீடு; மதுபான ஆலை பணம்' - வைகோ குறித்து மல்லை சத்யா `பகீர்'

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உ... மேலும் பார்க்க