பாண்டியன் ஸ்டோர்ஸ்: "அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு" - பூர்...
`ரூ.250 கோடி சொத்து; அரண்மனை வீடு; மதுபான ஆலை பணம்' - வைகோ குறித்து மல்லை சத்யா `பகீர்'
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் மல்லை சத்யாவை வைகோ நீக்கினார்.
இந்நிலையில் மல்லை சத்யா சென்னை அடையாறில் வரும் 20 ஆம் தேதி புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று (நவ.17) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மல்லை சத்யா, " செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்கு சொத்து இருக்கிறது.
அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால், அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. அதை வைத்து தான் வீட்டை அவர் கட்டியிருக்கிறார்.
ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினார். தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டியிருக்கிறார்.
அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என ரகசியமாக புதுமனை புகு விழா நடத்தினார்.
வைகோ உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் செல்கிறார்.
துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார் வைகோ.
ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுகிறார். அதே போல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ.

1998ல் மதிமுகவுக்கு நாடாளுமன்ற வாசலைத் திறந்து வைத்தது அதிமுக தான். அதிமுகவுடனான கூட்டணி தர்மத்தை மீறி வாஜ்பாய் அரசுக்கு தார்மீக ஆதரவு தந்ததால் அதிமுகவின் கோபத்தைப் பெற்றது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. அதை இப்போது சொல்ல முடியாது. சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ என்ற விமர்சனம் சரியானது.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாங்கள் சென்னை அடையாறில் வரும் 20ம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளோம்.
கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழுவினருக்கு மட்டுமே புதிய அரசியல் இயக்கத்தின் பெயர் தெரியும்.
திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து திமுகவிலும் வாரிசு அரசியல் உள்ளதே என்ற கேள்விக்கு, "திமுகவில் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருக்கிறது, ஆனால் துரை வைகோவிடம் அவை இல்லை" என்று மல்லை சத்யா பதிலளித்திருக்கிறார்.
















