`ரூ.250 கோடி சொத்து; அரண்மனை வீடு; மதுபான ஆலை பணம்' - வைகோ குறித்து மல்லை சத்யா...
வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் பெரிதாகி, பெரும் வன்முறையாக மாறியது. அதன் விளைவாக ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டும், நாட்டை விட்டும் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தின் போது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக, வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் வெடித்தது. இதற்கிடையில், நேற்று இரவு ஷேக் ஹசீனா தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், ``எனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. வங்கதேசத்தின் அவாமி கட்சியை அழிக்க முயற்சிக்கிறார் யூனுஸ். அது அவ்வளவு எளிதல்ல. அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக். அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது.
எங்கள் கட்சி தொண்டர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர். ஊழல்வாதியும், அடக்குமுறையாளரும், கொலைகாரருமான யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.

மக்கள் நீதி வழங்குவார்கள். நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன். மக்களின் நலனுக்காக மீண்டும் பாடுபடுவேன். வங்கதேச மண்ணில் நீதியை நிலைநாட்டச் செய்வேன்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றோம். இருப்பினும் தொடர்ந்து புது புது கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். அமைதியற்ற பதற்றம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.
நான் மனித உரிமைகளை மீறியவளா? என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் எனது நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
என் பெற்றோரையும், என் உடன்பிறப்புகளையும் இழந்துவிட்டேன். என் வீட்டையும் எரித்துவிட்டார்கள். இது இறைவன் கொடுத்த உயிர். அதை அவனே எடுத்துக்கொள்வான். எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை, 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐநா சபையின் உரிமைகள் அலுவலக அறிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும், ஷேக் ஹசீனாவின் இரண்டு உதவியாளர்களான முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கு எதிராகவும் இதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில், இந்த வழக்கை வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT-BD) மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம் விசாரித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரினர்.
இந்த நிலையில், தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் தீர்ப்பில், ``முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாகத் தெரிகிறது. ஆதாரமாக வழங்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் AI-ஆல் மாற்றப்படவோ, உருவாக்கப்படவோ இல்லை. எனவே, ஷேக் ஹசீனா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியான முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதே நேரம், தூண்டுதல், கொலை செய்ய உத்தரவிடுதல், அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல், குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஷேக் ஹசீனா குற்றவாளி என்பது உறுதியாகிறது. எனவே அதன் அடிப்படையில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்படுகிறது" என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.














