`இதுக்கா DMK-க்கு ஓட்டு போட்டோம்' - தூய்மைப் பணியாளர்கள் | Chennai Sanitary Work...
Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு
நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``அம்பேத்கரை ஏன் கம்யூனிஸ்ட்டுகள் வாசிக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆரம்ப காலகட்டங்களிலேயே அம்பேத்கரை கம்யூனிஸ்ட்டுகள் சரியாக வாசித்திருந்தால், இந்த மண்ணுக்கான சரியான புரிதலுடன்கூடிய அரசியலை ஏற்படுத்தியிருக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உலகளவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்தான் மிக முக்கியமான அரசியலாக இருக்கிறது என நம்புகிறேன். ஆரம்பத்திலேயே அம்பேத்கரையும் கம்யூனிஸ்ட் தோழர்கள் கையில் எடுத்திருந்தால், இந்தியாவிலும் நவம்பர் புரட்சி ஏற்பட்டிருக்கும்.
அதன் போதாமைகளையும், அம்பேத்கரை வாசிப்பதைத் தடுக்கும் கூறுகளையும் நான் யோசித்திருக்கிறேன். ஆரம்பத்தில் அவர்களுக்குள் நிகழ்ந்த கருத்து வேறுபாடுகள்தான் காரணமா என்றும் சிந்தித்திருக்கிறேன்.
தலித் கம்யூனிஸ்ட்டுகள் அம்பேத்கரை வாசித்திருக்கிறார்கள் என்பதையும், தலித் அல்லாத கம்யூனிஸ்ட்டுகள் அம்பேத்கரை வாசிப்பதில் தயக்கம் காண்பித்திருக்கிறார்கள் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதே நேரம் தலித்தாக இருப்பதால் மட்டுமே அம்பேத்கரிஸ்ட்டாக மாறிவிட முடியாது.

அம்பேத்கர் என்ன விரும்பினார்... என்ன சொல்லியிருக்கிறார் என்பதையெல்லாம் வாசித்து, புரிந்து, எடுத்துச் செல்வதில்தான் அம்பேத்கரிஸ்ட்டாக மாறமுடியும். மேலும், தன்னை அம்பேத்கரிஸ்ட்டாக அறிவித்துக்கொள்வதில் நிறைய தயக்கம் தலித்துகளிடமே இருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் இருக்கும் தலித்துகளிடம் இருக்கிறது. இப்போது வ.கீதா அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கும் விமர்சனங்கள் வரும். விமர்சனங்கள்தான் நம்மை முன்னேற்றும். அந்த வகையில் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது" என்றார்.














