Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' ...
கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை
பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த பணிகளில் BLO எனப்படும் பூத் லெவல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய அறிவுறுத்துவது, உரிய விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான வேலைகளை முடுக்கி விடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் SIR பணிச்சுமை காரணமாக BLO அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக SIR பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் பள்ளி ஊழியர் அனீஷ் ஜார்ஜ்.
44 வயதுடைய இவர் SIR பணிகளால் ஏற்பட்ட அதீத பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனீஷ் ஜார்ஜின் தந்தை இதுகுறித்து மலையாள ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், “ கடந்த சில நாட்களாக என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தார்.
ஆனால் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. எங்களால் இந்த வேதனையை தாங்கி கொள்ள முடியவில்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் இன்று SIR பணிகளை அரசு ஊழியர்கள் புறக்கணித்திருக்கின்றனர்.















