Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' ...
மதுரை: ``குப்பை மேடாக காட்சியளிக்கும் கிருதுமால் நதி; நோய் பரவும் அபாயம்'' - மக்கள் அச்சம்
மதுரை சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள கிருதுமால் ஆற்றின் அருகில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் குப்பைகளை இருபுறமும் குவித்து வைத்து சென்றனர். மாநகராட்சியினர் குவித்து வைத்த குப்பைகளை காய்ந்தவுடன் அள்ளிவிடுவோம் என்று சொல்லிச் சென்றவர்கள், இன்னும் அந்த குப்பைக் குவியல்களை அள்ளாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

"கிருதுமால் நதியின் மதகுகள் அருகே குப்பைகள் மழைக்காலங்களில் அடித்துவந்து தேங்கிவிடுகிறது.
அதனை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டாலும், அள்ளிக் குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்றாததால் கொசுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
இரவு நேரத்தில் கொசு கடியும், பாம்புகள் போன்ற அச்சுறுத்தலும் ஏற்படுகிறது" என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
"மழைக்காலங்களில் எங்களால் துர்நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. சாப்பிடும்போது கதவு, ஜன்னல் என அனைத்தையும் அடைத்துவிட்டே சாப்பிடுகிறோம். சாலைப் பக்கம் குவிக்கப்பட்ட குப்பைகளை மட்டும் அகற்றியவர்கள், நதியின் இந்த பக்கம் குடியிருப்புப் பகுதியில் அகற்றச் சொல்லிக் கேட்டபோது, ‘அது காய்ந்தவுடன் ஒரு வாரத்தில் வந்து அகற்றிவிடுவோம்’ என்றனர். ஆனால் இன்னும் வரவில்லை" என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் ஒருவர்.

பிறந்த குழந்தையை பாதுகாக்க முடியவில்லை என பதைபதைக்கிறார் ஒருவர். "கொசுக்கடி, பூச்சித்தொல்லை, பாம்புகள் அடிக்கடி வருகிறது. எங்கள் வீட்டில் பிறந்த குழந்தையை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. இதற்காகவே என் மகளை மூன்றே மாதத்தில் அவர்கள் மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். சின்னக் குழந்தைகள் மாலைப் பொழுதில் வீட்டில் இருப்பது கடும் அவதியாய் இருக்கிறது. விரைவில் சரிசெய்ய வேண்டும்" என்கிறார் அவர்.
இது குறித்து மாநகராட்சி அலுவலரிடம் கேட்டபோது, விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எங்கேயோ யாரோ நதியில் வீசும் குப்பை மழையில் அடித்துவரப்பட்டு இங்கு தேங்கி நிற்பதால், அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பொறுப்பேற்கும் வகையில் மக்களும் ஒத்துழைத்து குப்பைகளை போடாமல் இருந்தால், மதுரை நகரம் தூய்மையாக இருக்கும்.




















