`இதுக்கா DMK-க்கு ஓட்டு போட்டோம்' - தூய்மைப் பணியாளர்கள் | Chennai Sanitary Work...
தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்
தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியதாஸ் நடைபயிற்சி முடித்துவிட்டு, திருப்பத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரைத் துரத்தி வந்த வெறிநாய்கள், அவரது காலை கடித்து குதறியது, காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனே சிவவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த தகவலறிந்த கலெக்டர் பொற்கொடி சிவகங்கையிலுள்ள தெருக்களில் உடனே ஆய்வு செய்தார்.

அப்போது பல இடங்களில் வெறி நாய்கள் சுற்றி வந்ததும், ஏற்கெனவே குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடித்துள்ளதும் விசாரனையில் தெரியவந்தது.
இதையடுத்து, நகராட்சி ஆணையர் அசோக்குமாருக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவிக்லையாம்.
அதோடு அவருக்கும், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நந்தகோபாலுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் 'மனிதர்கள் மீது தெரு நாய்கள் தாக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பலமுறை வலியுறுத்தியும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது, அதற்கான விளக்கத்தை 3 தினங்களுக்குள் அளிக்கவேண்டும்' என விளக்கம் கேட்டுள்ளார்.
கலெக்டரின் நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவகங்கை நகராட்சி அலுவலர்கள் தரப்பில், "நகரிலுள்ள 200 தெரு நாய்களில் 135 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டோம், மீதியுள்ள நாய்களுக்கு தடுப்பூசி போட தயாராகி வருகிறோம், தற்போது தாசில்தாரை கடித்த இரு நாய்களையும் பிடித்து தடுப்பூசி செலுத்திவிட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.

"நாய்களின் தொல்லையாலும், வெறி நாய்க்கடியாலும் பொதுமக்கள் கதறும்போதெல்லாம் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், தங்கள் அலுவலர் பாதிக்கப்பட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கிறார்கள்" என்று சிவகங்கை மக்கள் பேசி வருகிறார்கள்.













