``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய ப...
மும்பை: ₹500 கோடி மருத்துவக் கல்லூரி தனியார்மயம்; அஜித்பவார் உறவினருக்கா? - மாநகராட்சி பதில் என்ன?
மும்பை புறநகர் பகுதியான கோவண்டியில் 580 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை மாநகராட்சிக்கு சொந்தமான சதாப்தி மருத்துவமனை நிர்வாகம் கட்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.500 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது இக்கல்லூரியை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் இதற்காக டெண்டர் வெளியிட்டுள்ளது. இதில் 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து டெண்டர் கொடுத்துள்ளன. அதில் ஒரு நிறுவனம் இதில் பங்கேற்க தகுதி பெறவில்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
‘டெர்னா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற ஒரு டிரஸ்டும் இதற்கு விண்ணப்பித்துள்ளது. இந்த டிரஸ்ட் ஏற்கனவே நவி மும்பையில் மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறது. இந்த டிரஸ்ட், மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவின் சகோதரர் பத்மசிங் பாட்டீலுக்கு சொந்தமானது ஆகும்.

தெலங்கானாவை சேர்ந்த ஒரு அமைப்பும் இதில் டெண்டர் கொடுத்துள்ளது. ஆனால் அஜித் பவார் உறவினரின் டிரஸ்டிற்கு மருத்துவக் கல்லூரி கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. இதற்கு உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தவிர மருத்துவக் கல்லூரி தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் 580 படுக்கைகளில், 264 படுக்கைகளை மாநகராட்சி நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அத்தகைய நிபந்தனை இருந்தாலும் தனியார் நிறுவனங்கள் இதில் நுழைந்துவிட்டால் முழு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையையும் தங்களது கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்" என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மும்பை மாநகராட்சி கமிஷனரும் நிர்வாகியுமான பூஷன் கக்ரானி கூறுகையில்,
"மற்ற தரப்பினருக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் டெர்னா டிரஸ்டிற்கும் பொருந்தும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி உள்ள அனைவரும் இதில் பங்கேற்கலாம். டெண்டரில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முன்பணம் மற்றும் வருவாய் போன்ற காரணங்களால் அதிகமானோர் இதில் பங்கேற்க தயக்கம் காட்டி வருகின்றனர்" என்றார்.
சதாப்தி மருத்துவமனையும் தனியார்மயமாக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே புனேயில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் அஜித் பவார் மகனின் நிறுவனத்திற்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இப்போது அந்த சர்ச்சையில் மும்பை மாநகராட்சி மருத்துவக் கல்லூரியும் இணைந்துள்ளது.

















