`ரூ.250 கோடி சொத்து; அரண்மனை வீடு; மதுபான ஆலை பணம்' - வைகோ குறித்து மல்லை சத்யா...
Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!
பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து நிதீஷ் குமார் தலைமையில் புதிய அரசு வரும் 20ம் தேதி பதவியேற்கிறது. இன்று தற்போதைய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 19ம் தேதி பீகார் சட்டமன்றத்தை கலைக்கும்படி அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் நிதீஷ் குமார் ஆளுநர் ஆரிப் கானை சந்தித்து சட்டமன்றத்தை கலைக்க அமைச்சரவை எடுத்த முடிவை முறைப்படி தெரிவித்தார்.
வரும் 20ம் தேதி நிதீஷ் குமார் புதிய முதல்வராக 10-வது முறையாக பதவியேற்கிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இதற்கான விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இதற்காக காந்தி மைதானம் இன்றே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு ஏற்பாடுகள் தொடங்கி இருக்கிறது. 20ம் தேதி விழா முடிந்த பிறகுதான் மைதானத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூடி நிதீஷ் குமாரை தங்களது சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர்.
புதிய அமைச்சரவையில் பா.ஜ.கவிற்கு 16 அமைச்சர்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு முதல்வர் பதவியும், 14 அமைச்சர் பதவியும் கிடைக்க இருக்கிறது. இது தவிர பா.ஜ.கவிற்கு ஒரு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு லோக் ஜன்சக்தி கட்சிக்கு 3 அமைச்சர் பதவியும் கிடைக்க இருக்கிறது. இதில் ஒரு துணை முதல்வர் பதவியும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.














