BB Tamil 9 Day 43: ‘திவாகர் போன பிறகுதான் தெளிவா இருக்கேன்’ - பாரு அதிரடி; நாமின...
`டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க?" - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2018 பிப்ரவரியில், தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளையும் எதிர்த்து `மக்கள் நீதி மய்யம்' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன்.
தங்களின் முதல் தேர்தலாக 2019 மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் 40 தொகுதிகளிலும் (புதுச்சேரி உட்பட) வேட்பாளர்களை நிறுத்தினார்.
அப்போது கமல் தனது தேர்தல் பிரசார வீடியோ ஒன்றில் தி.மு.க-வை விமர்சிக்கும் வகையில் டிவி மீது ரிமோட்டை தூக்கியெறிந்திருப்பார்.
அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39-ல் 38 இடங்களை தி.மு.க கூட்டணி வென்றது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெல்லவில்லை.

அதன்பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியை எதிர்த்து தனி கூட்டணியமைத்துக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், போட்டியிட்ட 140 இடங்களிலும் தோல்வி.
அதுவரையில் அ.தி.மு.க, தி.மு.க எதிர்ப்பில் தீவிரமாக இருந்த கமல் 2023-ல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது தி.மு.க-வுக்கு ஆதரவளித்தார்.
அதைத்தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தத்துடன் தேர்தலில் போட்டியிடாமல் அக்கூட்டணிக்கு ஆதரவளித்தார்.
பின்னர், தி.மு.க-வுடனான ஒப்பந்தத்தின்படி கடந்த ஜூலையில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். இந்த நிலையில், 2019-ல் தி.மு.க-வை எதிர்க்கும் வகையில் டிவி மீது ரிமோட் தூக்கியெறிந்தது பற்றி கமல் பேசியிருக்கிறார்.
தஞ்சாவூரில், பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகனின் மறைந்த தந்தை படத் திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு தேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களே-னு கேட்டீங்கனா...
ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஆனா ரிமோட்ட வேற ஆள் தூக்கிட்டு ஓடிட்டான்.
ரிமோட் அங்க போகக் கூடாது, அது மாநிலத்தோடதான் இருக்கணும். கல்வியே அப்படித்தான் இருக்கணும்னு நெனைக்றோம், ரிமோட்ட கொடுப்போமா...
எடுத்துட்டு வா திருப்பி, ஒளிச்சாவது வைப்போம், ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து தூக்கிட்டு போயிட்றான்... அப்டினு எடுத்த முடிவு இது.
இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க. ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்தத் தொல்லைகள் இருந்தே தீரும். அதை வேண்டாம் என்று நினைத்தால், மாற்று அரசியல் என்பது பாசிசம், அது எங்களுக்கு வேண்டாம்" என்று கூறினார்.













