'ஹீரோவா வேற யாரும் கிடைக்கலயா'னு கேட்டிருக்காங்க’- 1000 எபிசோடு மகிழ்ச்சியில் 'ஆ...
Assam: `அஸ்ஸாமுக்கு SIR கிடையாது; NRC நடவடிக்கைதான் காரணம்' - தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) தொடங்கியிருக்கிறது. SIR பணிகள் மூலம் பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இரண்டாம்கட்டமாக 12 மாநிலங்களில் SIR நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் நவம்பர் 4-ம் தேதிமுதல் SIR பணிகள் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அஸ்ஸாமில் வாக்காளர் ‘சிறப்பு திருத்தம்’ செய்ய திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக நேற்று (நவம்பர் 17) தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ``தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) நிலை நிலுவையில் உள்ளதால், அஸ்ஸாம் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை (SIR) நடத்தவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்வோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
2019-ம் ஆண்டு அஸ்ஸாமில் NRC பட்டியல் வெளியிட்டது. அதில் 3.3 கோடி விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 19.6 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
ஆனால் இன்றுவரை அது தொடர்பான இறுதி அறிவிப்பு எதுவும் பின்பற்றப்படவில்லை. அதே நேரம், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இது தொடர்பாqக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ``குடியுரிமைச் சட்டத்தின் கீழ், அசாமில் குடியுரிமைக்கு தனித்தனி விதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், குடியுரிமையைச் சரிபார்க்கும் பணி நிறைவடைய உள்ளது. SIR பணி முழு நாட்டிற்கும் உரியது என்றாலும், அஸ்ஸாம் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த மாநிலத்துக்கு மட்டும் இந்த SIR பொருந்தாது”. என்றார்.

சிறப்புத் திருத்தம் எப்படி நடக்கும்?
SIR நடவடிக்கையின் போது வாக்காளர்களுக்கு ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு உரிய பதில்களை எழுதி பூத் நிலை அதிகாரிகளிடம் கொடுத்தால் போதும்.
ஆனால், சிறப்பு திருத்தத்தில், பூத் நிலை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனைகளைச் செய்வார்கள். ஒவ்வொரு பூத் நிலை அதிகாரிகளிடம் ஆலோசனைகளும், நிபந்தனைகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட, முன் நிரப்பப்பட்ட பதிவேடாக BLO-க்களால் எடுத்துச் செல்லப்படும். வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவதற்கும், வாக்காளர்களிடமிருந்து அந்த விவரங்களைச் சரிபார்ப்பதற்கும், வீடு அடிப்படையாக இருக்கும்.
சந்தேகத்திற்குரிய வாக்காளர்களின் விவரங்கள் எந்த மாற்றமும் செய்யப்படாது. அவர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் நீக்குதல் உள்ளிட்ட எந்த மாற்றமும் செய்யப்படும். ஜனவரி 1, 2026-ம் தேதி இந்த சிறப்புத் திருத்தம் தொடங்கும் எனத் தெரியவந்திருக்கிறது.












