SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும்...
SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா?
தமிழ்நாட்டின் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்திருக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR).
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பீகாரின் 7.90 கோடி வாக்காளர்களிடம் இந்த SIR செயல்படுத்தப்பட்டது. அதன் இறுதியாக 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேநேரம், 'தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக இந்த SIR நடவடிக்கையை மேற்கொள்கிறது, அவசர அவசரமாக இதைச் செயல்படுத்த வேண்டிய தேவை என்ன? சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் மாநிலங்களைக் குறிவைத்து இந்த SIR செயல்படுத்தப்படுகிறது' என எத்தனைக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து SIR திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இரண்டாம் கட்டமாக SIR திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி நடத்தி வருகிறது. தி.மு.க, த.வெ.க, நாம் தமிழர் கட்சி என மாநிலக் கட்சிகள் தொடர்ந்து இந்த SIR-க்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்தன.
இதற்கிடையில், போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் அலைக்கழிக்கப்படுவது ஒருபக்கம், இன்னொரு பக்கம் இந்தப் பணியை மேற்கொள்ளும் பூத் நிலைய அதிகாரிகளுக்குப் பெரும் பணிச்சுமை நெருக்கடி இருப்பதும் புலனாகிறது. அதற்குச் சாட்சியாக இரண்டு தற்கொலைகளை அடையாளப்படுத்தலாம்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பையனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 18வது வாக்குச்சாவடியின் பி.எல்.ஓ-வான அனீஷ் ஜார்ஜ் (44), டிசம்பர் 4-ம் தேதிக்குள் தனது வேலையை முடிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், பணிச்சுமை காரணமாகவும் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மற்றொருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் முகேஷ் ஜாங்கிட் (45). இவரும் தேர்தல் ஆணையத்தின் கீழ் பூத் நிலைய அதிகாரியாகப் பணிபுரிந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், ``எனது மேற்பார்வையாளரிடமிருந்து கடுமையான பணி அழுத்தத்தை எதிர்கொள்கிறேன். SIR செயல்முறையின் இலக்கை முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவேன் என்றும் மிரட்டப்படுகிறேன்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் வேலை செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னால் தூங்கக்கூட முடியவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியான SIR பணிகள் தொடங்கிவிட்டன. நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய இந்தப் பணி 2026 பிப்ரவரி 7 அன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் வரை நீடிக்கும்.
பூத் லெவல் அதிகாரிகள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் விவரங்களைச் சரிபார்த்து விண்ணப்பங்களை வழங்கி, அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுவர வேண்டும். தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்களிடம் இந்தப் பணிகளை மேற்கொள்ள 77,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பூத் லெவல் அதிகாரிகளாக அரசுப் பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO), கிராம உதவியாளர்கள் (Village Assistants), மற்றும் பிற சிறு அரசுத் துறை ஊழியர்கள் (சுகாதாரம், வருவாய்த் துறை சார்ந்தவர்கள்) ஆகிவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது அரசு ஊழியர்களின் ஜாக்டோ-ஜியோ சங்கம்.

SIR திருத்த பணிகளை மேற்கொள்ளச் சொல்வதால் கூடுதல் வேலைப் பளு உள்ளதாகக் கூறி SIR பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பும் தெரிவித்திருந்தன.
தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் நடத்தும் SIR பணியால் வேலைப் பளு கடுமையாகியிருக்கிறது என்ற குரல் BLO தரப்பிலிருந்து அழுத்தமாக எழுந்திருக்கிறது. அதனால் ஜாக்டோ ஜியோ-வின் மாநிலப் பொதுச் செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர் பொ. அன்பழகனைத் தொடர்புகொண்டு, BLO-களின் பணிச்சுமை குறித்த விவரங்களைக் கேட்டோம்.
"நாங்கள் ஒரு அரசு நிர்வாகத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள். எங்களுக்கென அரசு நிர்ணயித்த பணிகள் இருக்கின்றன. அதேநேரம் திடீரென மற்ற பணிகளும் எங்களிடம் வழங்கப்படுகின்றன. உதாரணமாக இந்த SIR எடுத்துக்கொள்ளுங்கள். SIR படிவத்தைக் கணக்கெடுப்பதில் தொடங்கி, அதை மக்களிடம் எடுத்துச் சென்று பூர்த்தி செய்வது, கண்காணிப்பது என எல்லாமே நாங்கள்தான் செய்ய வேண்டும்.
இதற்கிடையில் எங்களுக்கான ஆசிரியப் பணியையும் பார்க்க வேண்டும். காலை, மாலை என்ற எந்த நேர வித்தியாசமும் இல்லாமல், இரவு 10 மணிக்கெல்லாம் திடீர் திடீரென கலெக்டரிடமிருந்து, 'அர்ஜெண்ட் ஆன்லைன் மீட்டிங்' என அழைப்பு வருகிறது. நாங்கள் எந்தச் சூழலிலிருந்தாலும் அந்த மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

எந்தத் துறையிலிருந்து BLO பணியாளர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அதற்கு எந்த வரைமுறையும், திட்டமிடலும் இல்லை. நவம்பர் 4-ம் தேதியிலிருந்து எத்தனை திடீர் நியமனங்கள் தெரியுமா? இந்தப் பணியை மேற்கொள்வதற்குப் போதுமான பயிற்சி கூட எங்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், எங்கள் பணியை முடிப்பதற்குக் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு மாதத்துக்குள் இத்தனை வேலைகளையும் எப்படி முடிக்க முடியும்? ஏற்கெனவே எங்கள் பணியிடங்களில் இரண்டு வேலைகளைச் செய்து வருகிறோம். இப்போது மூன்றாவது சிறப்புப் பணி வேறு எங்களை அழுத்துகிறது. இந்தப் பணிக்கு எங்களுக்கு எந்த விதமான ஊக்கத் தொகையும் கூட வழங்கப்படவில்லை.
சரி, இந்தப் பணியை மக்களுக்காகச் செய்வோம் என்றால் கூட, இது தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தேர்தல் ஆணையமோ, மத்திய அரசோ, மாநில அரசோ மக்களுக்கான முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.
அதனால், ஒருபக்கம் நாங்கள் சிரமத்தைச் சந்திக்கிறோம் என்றாலும், இன்னொரு பக்கம் மக்களும் பெரும் துயரத்துக்கு ஆளாகிறார்கள். மக்களுக்கான விழிப்புணர்வு இருந்து, நாங்களும் சரியான பயிற்சியுடன் மக்களிடம் சென்றால் இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
தேர்தல் ஆணையமும் ஜனநாயக முறைப்படி நடந்துகொள்வதில்லை. தேர்தல் ஆணையம் எங்களின் சிக்கல் என்ன என்பதைப் பொருட்படுத்தாமல் வெறும் கட்டளை மட்டுமே இட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பாரத்தைத் தாங்க முடியாமல், நாங்கள் திணறும்போது, எங்கள் மீது நடவடிக்கை பாயும் என மிரட்டும் தொனியில் பேசுகிறது அரசு.
அந்த மிரட்டலையும் மீறித்தான் எங்கள் பணி உரிமையைப் பாதுகாக்க வீதிக்கு வந்திருக்கிறோம். கேரளாவிலும், ராஜஸ்தானிலும் BLO பணியாளர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். உண்மையில் அந்த அளவுதான் இங்குப் பணி அழுத்தம் இருக்கிறது. உடல் நிலையும், மனநிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இந்த SIR மத்திய அரசின் ஆதரவுடன் தேர்தல் ஆணையம் கொண்டுவருகிறது. மாநில அரசு அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது. அதனால் எங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு சரியாகக் கிடைப்பதில்லை.
நாங்கள் இந்த SIR பணியிலிருந்தாலும், இந்தப் பணி முடிந்ததும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிப் பணிகளையும் நாங்கள்தான் முடிக்க வேண்டும். அப்படி அதில் ஏதேனும் தொய்வு இருந்தால் அதற்கும் நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
நாங்கள் எங்கள் பணியைச் செய்யாமல் தட்டிக்கழிக்க இப்படிப் பேசுகிறோம் என மக்கள் கருதிவிடக் கூடாது. இதற்கு முன் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் என எங்களிடம் வழங்கப்பட்ட பணிகளை, மக்களின் நலன் கருதி வெற்றிகரமாகச் செய்து கொடுத்திருக்கிறோம்.
ஆனால் இப்போது ஏன் வீதிக்கு வந்திருக்கிறோம் என்றால், எங்களின் கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால்தான். இதே SIR பணியை எந்தச் சிக்கலும் இல்லாமல் முடிக்க முடியும். தேர்தல் ஆணையத்திடமிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும், கலெக்டர்கள் அதிகாரம் செலுத்தாமல், எங்களையும் உணர்வுள்ள மனிதர்களாக, ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்.

ஏற்கெனவே எங்களுக்கு இருக்கும் பணிகளிலிருந்து இந்தப் பணி முடியும் வரை விடுவிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமித்து, தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை அதிகப்படுத்த வேண்டும். எங்களின் உழைப்புக்கேற்ற ஊக்கத்தொகையைக் கொடுக்க வேண்டும். மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.















