போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி
இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்
ஸ்ரீநகா் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது.
முன்னதாக, ஜம்மு, சம்பா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்குமாறு மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, பீரங்கி குண்டுகளைப்போன்ற பலத்த வெடிசப்தம் கேட்டதாக எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை இரவு பதிவிட்ட ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் இருந்து குஜராத்தின் புஜ் வரை மொத்தம் 26 இடங்களில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘துரதிருஷ்டவசமாக ஃபெரோஸ்பூரில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதபோது உள்ளூா் மக்களில் 3 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.