Career: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில் சம்பளம்; எப்படி...
`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி
பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அத்திருமணம் நடந்தபோது தர்மேந்திராவிற்கு ஏற்கனவே திருமணாகி குழந்தைகளும் இருந்தன. தர்மேந்திரா - ஹேமாமாலினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தர்மேந்திரா காலமானார்.
அவர் மரணமடைந்துள்ள நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை ஹேமாமாலினி தனது சுயசரிதையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். ஹேமாமாலினியின் வாழ்க்கை வரலாற்றை ராம் கோபால் முகர்ஜி என்பவர் சுயசரிதையாக எழுதியுள்ளார்.
Hema Malini: Beyond The Dream Girl என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள சுயசரிதையில், ''எனது மகள் இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் எனது மாமியார் சத்வந்த் கவுர் என்னை முதல் முறையாக பார்க்க வந்தார். நான் மும்பை ஜுகுவில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங்கில் ஈடுபட்டிருந்தபோதுதான் அவர் என்னை பார்க்க வந்தார்.

அவர் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. நான் அவரது காலை தொட்டு வணங்கினேன். அவர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு மகளே மகிழ்ச்சியாக இரு என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இருந்ததால் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். தர்மேந்திராவின் தந்தை கேவல் கிஷன் சிங் தியோலும் எனது தந்தை வி.எஸ். ராமானுஜம் சக்ரவர்த்தியும் கை மல்யுத்தத்தில் ஈடுபடுவதுண்டு.
தர்மேந்திராவின் தந்தை, என் தந்தை அல்லது சகோதரனை பார்க்க வரும்போது அவர்கள் தேனீர் அருந்துவண்டு. அவர்கள் கைகுலுக்குவதற்குப் பதிலாக, அவர்களுடன் கையால் மல்யுத்தம் செய்வார். அவர்களைத் தோற்கடித்த பிறகு வெண்ணெய், லஸ்ஸி, நெய், இட்லி சாம்பார், நெய் உங்களுக்கு போதிய பலத்தை கொடுக்கவில்லை என்று தர்மேந்திராவின் தந்தை நகைச்சுவையாகச் சொல்வார். என் அப்பாவும் சிரிப்பில் கலந்து கொள்வார். தர்மேந்திராவின் தந்தை மிகவும் மகிழ்ச்சியான நபர்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தர்மேந்திராவும், ஹேமாமாலினியும் 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்நேரம் தர்மேந்திராவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவர்களது திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்ததால் தர்மேந்திரா மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. 1970ம் ஆண்டு Tum Haseen Main Jawaan என்ற படத்தில் நடித்தபோதுதான் முதல் முறையாக இருவரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு பல படங்களில் இணைந்து நடித்தனர்.



















