ஈரோட்டில் ஜவுளி வணிக வளாக வியாபாரிகள் முற்றுகை
ஈரோட்டில் சாலையோர ஜவுளிக் கடைகளால் வணிக வளாகத்தில் விற்பனை பாதிப்பதாகக் கூறி வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி வணிக வளாகத்தில் மக்கள் ஆா்வமாக ஜவுளி எடுக்க சென்றனா். இதனிடையே ஜவுளி வணிக வளாகத்தின் முன் சாலையோரம் ஏராளமான ஜவுளிக் கடைகளை அமைத்ததால் வணிக வளாகத்துக்குள் பொதுமக்கள் செல்வது குறைந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ஜவுளி வணிக வளாக கடை வியாபாரிகள் திரண்டு, சாலையோர வியாபாரிகளிடம் கடைகளை அப்புறப்படுத்தக்கோரி முற்றுகையிட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் போலீஸாா் சாலையோர வியாபாரிகளை அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத்தினா்.
இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் சாலையின் நடுவே கடைகளை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து இருதரப்பு வியாபாரிகளிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில், சமாதானம் அடைந்த சாலையோர வியாபாரிகள் ஜவுளி வணிக வளாகம் முன்பு இல்லாமல் சற்று தள்ளி கடைகளை அமைத்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமாா் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.