ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேர...
உக்கிரமடையும் உட்கட்சிப் பூசல்... `பலவீனமடையும்' மம்தா - என்னதான் நடக்கிறது திரிணாமுல் காங்கிரஸில்?
மேற்கு வங்கத்தில் அண்மையில் (மே 4) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு அடுத்தடுத்து பெரும் பின்னடைவுகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டு வருகின்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் மீதான தாக்குதல்கள், உட்கட்சிப் பூசல்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த கூட்டப் புறக்கணிப்புகள், போலி கையெழுத்து மோசடி, சி.ஐ.டி விசாரணை என திரிணமுல் காங்கிரஸ் கட்சி தற்போது அஸ்தமனத்தை நோக்கி நகர்வது போன்ற சூழல் உருவாகியுள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கின. நீண்டகாலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ.க-விடம் தோல்வியைத் தழுவி ஆட்சியை இழந்தது. இந்தத் தோல்வி கட்சிக்குள்ளிலிருந்த அதிருப்திக் குரல்கள்களை வெளியே கொண்டுவந்தது.

குறிப்பாக மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக மூத்த தலைவர்கள் கடுமையாகப் போர்க்கொடி தூக்கினர். ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தை அரசு கையாண்ட விதம், ரேஷன் மற்றும் ஆசிரியர் நியமன ஊழல்கள், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' நிறுவனத்தின் ஆதிக்கம் ஆகியவையே தோல்விக்குக் காரணம் என மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய், பதவியை ராஜினாமா செய்த எம்.பி ககோலி கோஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆகியோர் குற்றம் சாட்டினர். குறிப்பாக, ஐபேக் நிறுவனம் கட்சியைச் சீரழித்து, ஊழல்களுக்குக் காரணமாகி, மம்தாவைத் தனிமைப்படுத்திவிட்டதாக குமுறினர்.
இதற்கு எதிர்வினையாற்றிய மம்தா பானர்ஜி, தங்களை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளதுடன், முதற்கட்டமாக செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தாவை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக மூத்த தலைவர் சோவன்தேப் சட்டோபாத்யாயை நியமிக்கக் கோரி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்ட தீர்மான கடிதத்தை, மே 9 அன்று அபிஷேக் பானர்ஜி சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். ஆனால், இதில் தங்களின் கையெழுத்துகள் போலியாகப் போடப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான ரிதாப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சாகா ஆகியோர் சட்டப்பேரவைச் செயலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தை மாநில குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பகருல் இஸ்லாம், சந்திரநாத் சின்ஹா, அரூப் ராய், தபஸ் மைட்டி, நயனா பானர்ஜி, தபஸ் மொண்டல், சுபாசிஷ் தாஸ், தொராஃப் ஹொசைன் மொண்டல், தினேன் ராய், குணால் கோஷ், அப்துல் அசீஸ் டாக்டர், அப்துல் மதின் மற்றும் தௌசீஃபுர் ரஹ்மான் ஆகிய 13 எம்.எல்.ஏ-க்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரூப் ராய், பகருல் இஸ்லாம் மற்றும் சுபாசிஷ் தாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் அந்தத் தீர்மானத்தில் இருப்பது தங்களது கையெழுத்து அல்ல என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, சி.ஐ.டி அமைப்பு அபிஷேக் பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பி, கட்சியின் தீர்மான புத்தகத்துடன் திங்கட்கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அபிஷேக் பானர்ஜி தனது வழக்கறிஞர் மூலம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.
ஒருபுறம் கட்சிக்குள் சிக்கல் என்றால், மற்றொருபுறம் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் மம்தா பானர்ஜி. கடந்த சனிக்கிழமையன்று கொலை செய்யப்பட்ட கட்சித் தொண்டர் ஒருவரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற திரிணமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரும் எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் காயமடைந்த அபிஷேக் பானர்ஜி, "அவர்கள் என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் ஹூக்ளி மாவட்டத்தில் மூத்த எம்.பி கல்யாண் பானர்ஜி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கிடையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 31), கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. 2026 மாநிலத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 எம்.எல்.ஏ-க்களில் வெறும் 20 பேர், அதாவது நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைமையின் உத்தரவைப் புறக்கணித்தது, கட்சியின் சுப்ரீம் பவர் மம்தா பானர்ஜியை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனால் அவர் கூட்டம் நடைபெறவிருந்த அறைக்குக்கூட செல்லாமல், மூத்த தலைவர் சோவன்தேப் சட்டோபாத்யாய் மூலமாக கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவலை மட்டும் அறிவித்தார். ஆனால், எம்.எல்.ஏ கூட்டத்தின் ஒரு தரப்பு, மம்தா பானர்ஜி வந்திருந்த சில எம்.எல்.ஏ-க்களுடன் முறைசாரா ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறுகிறது.
"திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-கள் தாக்கப்பட்டதற்கு எதிராக எம்.எல்.ஏ-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், பல எம்.எல்.ஏ-க்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாலுமே அவர்களால் கூட்டத்திற்கு வர இயலவில்லை.
கூட்டத்தை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையைத் தலைமை ஏற்றுக் கொண்டது. இதுதான் மம்தா பானர்ஜியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என எம்.எல்.ஏ-வும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குணால் கோஷ் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துர் ரஹீம் பாக்ஸி, நதியா மாவட்டத்தைச் சேர்ந்த ருக் பானுர் ரஹ்மான் போன்ற தூரத்து எம்.எல்.ஏ-க்கள் காளிகாட் கூட்டத்திற்கு வர முடிந்தபோது, கொல்கத்தாவைச் சேர்ந்த ஜாவேத் அகமது கான் மற்றும் சந்திபன் சாகா போன்ற உள்ளூர் எம்.எல்.ஏ-க்கள் ஏன் வரவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத எம்.எல்.ஏ ஒருவரின் கேள்வி மம்தா பானர்ஜியின் சாம்ராஜ்யம் சிக்கலில் இருப்பதை உணர்த்துகிறது.
இது போன்ற சூழல்கள் ஏற்படும் என்பதை மம்தா பானர்ஜி எதிர்பார்த்திருந்ததாகவே தெரிகிறது. அதன் காரணமாகத்தான், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய உத்தி வகுப்புக் கூட்டத்திற்கு 10 எம்.எல்.ஏ-க்கள் வராத போது, மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே, ``கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர்கள் தாராளமாகச் செல்லலாம், நான் கட்சியைப் புதிதாகக் கட்டியெழுப்புவேன். எனக்கு இன்னும் அந்த ஆற்றல் இருக்கிறது." எனப் பேசியிருந்தார்.
இந்தத் தீவிர அரசியல் பரபரப்புக்கு மத்தியில், இன்று (ஜூன் 1) திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ-க்களான சந்திபன் சாகா மற்றும் ரிதாப்ரதா பானர்ஜி ஆகிய இருவரையும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் சந்திராணி பட்டாச்சார்யா கையெழுத்திட்டு அனுப்பிய அந்த கடிதத்தில், ``அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதிலும், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைமை கூட்டும் கூட்டங்களில் நீங்கள் தொடர்ந்து பங்கேற்கத் தவறிவிட்டீர்கள்.

மேலும், கட்சியின் நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அறிக்கைகளையும், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், தன் ஆவேச ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி.
இந்த நீக்க உத்தரவு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான், மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மாநிலச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``போலி கையெழுத்து விவகாரத்தில் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே புகார் அளித்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின்படி இந்த மோசடியில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது.
இது சிலருக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே செயலிழந்துவிட்ட ஒரு கட்சி என்பதால் நாங்கள் அப்படி எதுவும் செய்ய விரும்பவில்லை. பால்டா தொகுதி டி.எம்.சி வேட்பாளர் ஜஹாங்கிர் கான் மே 21 மறுதேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு போட்டியில் இருந்து பின்வாங்கியதே இக்கட்சி முற்றிலும் முடங்கிவிட்டது என்பதற்கு சாட்சி. சி.ஐ.டி விசாரணைக்கும் பா.ஜ.க-விற்கும் அல்லது அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்கிறது. அபிஷேக் பானர்ஜிக்கு அவகாசம் வழங்குவது குறித்து சி.ஐ.டி தான் முடிவெடுக்க வேண்டும், அதில் நான் தலையிட மாட்டேன்" என்று கூறினார்.
தேர்தல் தோல்விக்குப் பிந்தைய இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள், மேற்கு வங்க அரசியலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அரசியல் சதுரங்கத்தில் ராணி தப்புவாரா? பார்ப்போம்!















