'துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்; திமுக கூட்டணியில் தொடர்வது..!'...
FIFA : காலில் ஷூ இல்லை என்பதுதான் காரணமா? 1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை!
இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, 'என்ன நடந்திருக்கும்?' என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது.
ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால், 1983-ல் கபில் தேவின் கிரிக்கெட் அணி ஏற்படுத்திய தாக்கத்தை கால்பந்திலும் ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு விளையாட்டாக இருந்த கால்பந்து, ஒரு தேசிய உணர்வாக மாறியிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. 1950-ன் அந்த கோடைக்காலத்தில் நடந்த நம்பமுடியாத நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.

இந்தியா ஏன் 1950 உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை என்பதற்கு பல கட்டுக்கதைகள் காலப்போக்கில் உருவாகியது. அவற்றில் மிகவும் பிரபலமானது, 'இந்திய வீரர்கள் காலில் ஷூ அணியாமல் விளையாட FIFA அனுமதிக்காததால் இந்தியா போட்டியிலிருந்து விலகியது' என்பதுதான்.
இந்தக் கதைக்கு ஒரு வலுவான பின்னணியும் இருந்தது. 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணி தனது முதல் சர்வதேசப் போட்டியில், ஐரோப்பிய ஜாம்பவானான பிரான்ஸை எதிர்கொண்டது.
அந்த அணியில் பல வீரர்கள் காலில் ஷூ அணியாமல், வெறும் கால்களை டேப் சுற்றிக்கொண்டு விளையாடினர். கடைசி நேரத்தில் ஒரு கோல் வாங்கி 2-1 என்ற கணக்கில் தோற்றாலும், அவர்களின் ஆட்டம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. ஷூ இல்லாத இந்தியர்கள், ஐரோப்பியர்களை மிரட்டிய அந்த காட்சி ஒரு பிம்பமாகவே மாறிப்போனது. இதனால், FIFA-வின் விதிமுறைகளுக்கு அடிபணிய மறுத்து, இந்தியா தன்மானத்துடன் வெளியேறியதாகக் கூறப்பட்ட கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், இது உண்மையல்ல. 1953 வரை, வீரர்கள் ஷூ அணிய வேண்டும் என்ற கட்டாய விதியை FIFA கொண்டிருக்கவில்லை. சொல்லப்போனால், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில்கூட இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் விளையாடினார்கள். அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.
ஷூக்களை விட, நிர்வாக குளறுபடிகளும், நிதிப் பற்றாக்குறையும், தவறான முன்னுரிமைகளும்தான் இந்தியா உலகக் கோப்பையில் பங்கேற்காமல் போனதற்கு முக்கியக் காரணங்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக நாடுகள் பொருளாதார ரீதியாக மீண்டு வந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பிரேசில் போன்ற தென் அமெரிக்க நாட்டுக்கு பயணம் செய்வது என்பது மிகப்பெரிய செலவு பிடிக்கும் விஷயமாக இருந்தது. நிதி மற்றும் பயணச் சிக்கல்கள் காரணமாக ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகள் தகுதிச் சுற்றிலிருந்தே விலகின. சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு (AIFF) இது ஒரு பெரும் சவாலாக இருந்தது.
ஆரம்பத்தில், பிரேசில் கால்பந்து சம்மேளனமும், FIFA-வும் நிதி உதவி செய்வதாக உறுதியளித்தன. ஆனால், பல மாதங்கள் யோசனைக்குப் பிறகு, போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, மே 23 அன்று கல்கத்தாவில் நடந்த கூட்டத்தில், AIFF இந்த முடிவை எடுத்தது. "தாமதமாக தகவல் கிடைத்ததாலும், அணியைத் தயார் செய்ய போதுமான நேரம் இல்லாததாலும் இந்தியா உலகக் கோப்பையில் பங்கேற்காது," என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக்தான் எல்லாம்! உலகக் கோப்பை ஒரு பொருட்டே இல்லை!
இன்று, FIFA உலகக் கோப்பைதான் கால்பந்தின் உச்சம். ஆனால் 1950-ல் நிலைமை அப்படியில்லை. உலகக் கோப்பை என்பது அப்போதுதான் வளர்ந்து வந்த ஒரு போட்டியாக இருந்தது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளுக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. இந்திய வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஒலிம்பிக்தான் உச்சபட்ச கனவாக இருந்தது.
1948 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறப்பான ஆட்டம், ஒலிம்பிக் கால்பந்தில் இந்தியா ஒரு சக்தியாக உருவாக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது. எனவே, அவர்களின் முழு கவனமும் பிரேசில் உலகக் கோப்பையை விட, வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மீதுதான் இருந்தது.
அப்போதைய அணியின் நட்சத்திர வீரரான சைலன் மன்னா, பின்னர் ஒரு பேட்டியில், "எங்களுக்கு உலகக் கோப்பை பற்றி அப்போது பெரிதாகத் தெரியாது. தெரிந்திருந்தால் நாங்களே முயற்சி எடுத்திருப்போம். எங்களுக்கு ஒலிம்பிக்தான் எல்லாமே. அதைவிடப் பெரியது எதுவும் இல்லை," என்று குறிப்பிட்டார். 1951 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியின் கேப்டனும் அவர்தான்.
அதேபோல், ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதி ஆட்டத்தில் வெற்றி கோலை அடித்த ஷியூ மேவலால், "எங்கள் காலத்தில் உலகக் கோப்பை முக்கியமல்ல, ஒலிம்பிக்தான். உலகக் கோப்பையிலிருந்து இந்தியா விலகியபோது நாங்கள் பெரிதாக ஏமாற்றமடையவில்லை," என்று கூறியுள்ளார்.
இது தவிர, தொழில்முறை வீரர்களைக் கொண்ட ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளிடம், நமது அமெச்சூர் அணி படுதோல்வி அடைந்தால், ஒலிம்பிக்கில் பெற்ற நற்பெயர் கெட்டுவிடும் என AIFF தலைவர் மொய்ன்-உல்-ஹக் கவலைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வரலாறு எப்போதும், 1950 உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்று, பின்னர் விலகிக்கொண்டது என்பதை நினைவில் வைத்திருக்கும். ஆனால், அன்று அந்த விமானத்தில் ஏறி பிரேசிலுக்குச் சென்றிருந்தால், இந்திய கால்பந்தின் கதை எப்படி மாறியிருக்கும் என்பதை என்றென்றைக்கும் அது ஆச்சரியத்துடன் யோசித்துக்கொண்டே இருக்கும்.!


















