செய்திகள் :

விஜய்யின் பத்திரிகையாளர் தவிர்ப்பு யுக்தி எப்படி உருவாக்கப்பட்டது? - களத்திலிருந்து ஓர் அலசல்!

post image

முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக கடந்த வாரம் டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார். பிரதமர் மோடியையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருக்கிறார். இந்தப் பயணத்தில் முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்த்திருப்பது பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.

வழக்கமாக முதல்வரோ அமைச்சரோ டெல்லிக்கு சென்று பிரதமர் போன்ற உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்களை சந்திக்கும் போது சந்திப்பை முடித்துவிட்டு, அந்த சந்திப்பின் சாராம்சங்களை பத்திரிகையாளர்களிடம் விளக்கி கூறுவார்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என நாம் பார்த்த முதல்வர்கள் அத்தனை பேரும் இந்த மரபை கடைப்பிடித்திருக்கிறார். இப்போதைய முதல்வர் அதை செய்யவில்லை.

விஜய்
விஜய்

பத்திரிகையாளர்கள் சத்தமாக அழைத்தும், `மரபை தயவுசெய்து உடைக்காதீர்கள் சார்' என கேட்டும் அதை சட்டை செய்யவே இல்லை விஜய். இன்று திருச்சியில் நடைபெறும் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கூட ஊடகத்தினருக்கான அரங்கு, நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் இருந்து தள்ளி தனியே அமைக்கப்பட்டுள்ளது. பலருக்கும் இவையெல்லாம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், தவெக என்கிற கட்சியையும் விஜய்யையும் நெருக்கமாக நெருக்கமாக ஃபாலோ செய்த பத்திரிகையாளர்களுக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இருந்திருக்காது.

ஏனெனில், விஜய் அவரின் வியூக வகுப்பு குழுவால் இப்படித்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார். பத்திரிகையாளர்களை சந்திக்காமல் அவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது விஜய் நீண்ட காலமாக கடைபிடித்து வரும் யுக்தி.

விஜய்யின் கட்சி அலுவலகம் மற்ற எந்த கட்சி அலுவலகத்தை விடவும் அதி தொலைவில் இருக்கிறது. நகரத்தின் மையத்தில் இருக்கும் ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள் குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரமாவது பயணித்தால் மட்டுமே விஜய்யின் பனையூர் தவெக அலுவலகத்துக்கு செல்ல முடியும்.

மற்ற எல்லா கட்சிகளிலும் கட்சி சார்ந்த செய்திகளையும் நிகழ்வுகளையும் செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாட்ஸ் அப் குழு வைத்திருப்பார்கள்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், எம்.எல்.ஏக்கள் கூட்டம், கட்சி நிகழ்ச்சி என எல்லாவற்றை பற்றிய அப்டேட்டையும் அதில் தெரிவிப்பார்கள். செய்தி சேகரிக்க வருமாறு மரியாதையாக அழைப்பும் விடுப்பார்கள்.

இந்த பாங்கை நாம் தவெகவிடம் எதிர்பார்க்கவே முடியாது. தவெகவுக்கென்றும் அப்படியொரு வாட்ஸ் அப் குழு இருக்கிறது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஆனால், அதில் அவர்கள் விருப்பத்துக்கு எப்போதாவதுதான் நிகழ்ச்சிகளை பற்றி அப்டேட் கொடுப்பார்கள். மற்றபடி செய்தியாளர்களாக தங்களுக்கு இருக்கும் சோர்ஸை பயன்படுத்தி நிகழ்ச்சியை பற்றி அறிந்துகொண்டு பனையூருக்கு ஓட வேண்டும்.

விஜய்யின் அலுவலகம் அமைந்திருக்கும் சீஷோர் 8th அவென்யூவின் ஆரம்பத்திலிருந்தே பவுன்சர்கள் நிற்பார்கள். அதுவும் பலரும் வெளி மாநில பவுன்சர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு தமிழகத்தில் என்னென்ன ஊடகங்கள் இருக்கின்றன என எந்த விவரமும் தெரியாது. செய்தியாளர் என்றால் கையில் மைக் வைத்திருப்பார்கள் கேமரா வைத்திருப்பார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு புரியும்.

அதனால் சேனல் நிருபர்களை மட்டும் கொஞ்சம் அலைக்கழிப்போடு அந்த வீதிக்குள் அனுமதித்து விடுவார்கள். தினசரி, வாரப் பத்திரிகைகள் பற்றி அவர்களுக்கு எந்த தகவலும் தெரிந்திருக்காது.

அதன் நிருபர்களை உள்ளே அனுப்புவதற்குள் ஒரு பாடு படுத்தி விடுவார்கள். விஜய் கடைசியாக YMCA வில் நடத்திய கூட்டம் வரைக்கும் இந்த ரோதணையை அனுபவித்திருக்கிறேன்.

இதையெல்லாம் கடந்து அந்த 8th அவன்யூக்குள் சென்றால் அலுவலகத்துக்கு வெளியே மொட்டை வெயிலில் பத்திரிகையாளர்களை தடுத்து அடைத்து வைக்க 4 பேரிகார்டுகளையும் கயிறுடன் கூட 15 பவுன்சர்களையும் போட்டு வைத்திருப்பார்கள்.

கட்சியின் மூன்றாமாண்டு தொடக்கவிழா என பிப்ரவரியில் கொண்டாடினார்கள். அன்றைக்கெல்லாம் எதோ கலவர தடுப்பு நடவடிக்கை போல மூன்றடுக்குக்கு பேரிகார்டுகளையும் தடுப்புகளையும் போட்டு அதற்கு முன்பு பவுன்சர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

இதெல்லாம் பத்திரிகையாளர்களிடமிருந்து விஜய்யை பாதுகாப்பதற்கான செட்அப். இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையத்தை ஒரு பிரதமருக்கு அரசு கூட வழங்காது.

விஜய்
விஜய்

விஜய் தன்னுடைய நிர்வாகிகளுடன் நடத்தும் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கதான் சென்றிருப்போம். ஆனால், நம்மால் விஜய்யின் புகைப்படத்தையோ சிறு வீடியோ துணுக்கையோ கூட எடுக்க முடியாது.

முழுவதும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட காரில் பவுன்சர்கள் சூழ அலுவலகம் வருவார்.

அதே செட்டப்பில் அப்படியே அப்படியே அலுவலகத்துக்குள் திரும்பி விடுவார். 25 கி.மீ பயணித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளருக்கு மக்களிடம் காட்ட எதுவும் இருக்காது.

எல்லா கட்சியிலும் கட்சி கூட்டங்களில் மீடியாக்களை விசுவல் எடுத்துக் கொள்ள முதல் 10-15 நிமிடங்கள் அனுமதிப்பார்கள். முடிந்த பிறகு கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள். அந்த கதையெல்லாம் இங்கே கிடையவே கிடையாது. வெகு சமீபமாகத்தான் கூட்டங்களுக்குப் பிறகு சி.டி.ஆர்.நிர்மல் குமாரை வைத்து பத்திரிகையாளர்களை சந்திக்க வைக்கிறார்கள்.

ஒன்றிரண்டு சமயங்களில் எதோ பெரிய மனது வைத்து 'தலைவரை கேட் முன்பாக இறங்க சொல்கிறேன்' என ஆனந்த் நிருபர்களிடம் கூறுவார். அப்போதும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பார். எந்தப் பத்திரிகையாளரின் கையிலும் மைக் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிடுவார்.

ஒரு முறை அப்படி அவர் கூறிய பிறகும் ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டும் கையில் மைக்கை வைத்திருந்தார். உடனே பதறிப்போன ஆனந்த், 'ஐயா ராசா அந்த மைக்கை கொஞ்சம் ஓரமா வச்சிட்டு வாப்பா....' என விளையாட்டாக கெஞ்சும் தொனியில் கேட்டார். 'சார் அதுலயே வயரே கனெக்ட் பண்ணல. ஒண்ணும் பிரச்னை இல்ல...' என அந்த பத்திரிகையாளர் கூற, 'இல்ல ராசா உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா...நீங்க மரத்தடியில மைக்கை வச்சிட்டு வந்துடுங்க..ப்ளீஸ்' எனக் கேட்டு விஜய்யை மைக்குகளிடமிருந்து காப்பாற்றினார் ஆனந்த்.

கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இரண்டரை ஆண்டுகளில் கட்சி அலுவலகத்துக்குள் வைத்து அதிகாரப்பூர்வமாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு எது தெரியுமா?

விஜய் செங்கோட்டையன்
விஜய் செங்கோட்டையன்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் இல்லையா...அந்த நாளில் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை நடந்த சம்பவம் இது. அதற்கு முன்பு வரைக்கும் அந்த அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தப்பட்டிருக்கவில்லை.

பனையூரில் நடக்கும் கூட்டங்களின் விசுவல் கிடைக்காமல் சேனல் நிருபர்களும் கேமராமேன்களும் தலையை பிய்த்துக் கொள்வார்கள். பனையூர் அலுவலகத்தின் கேட் முன்பாக காரை நிறுத்தி அதன் மீது ஏறி அபாயமான முறையில் செய்திக்கு வேண்டிய காட்சிகளை எடுப்பார்கள். ட்ரைபேடை தூக்கிப் பிடித்த படி நின்றே அவர்களின் உயிர் போகும்.

மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில்தான் விஜய் தனது கட்சி நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்தியிருக்கிறார். அந்த மகாபலிபுரம் ஹோட்டலிலும் நிருபர்களை நிகழ்வரங்குக்குள் அனுமதிக்கவே மாட்டார்கள். அரங்கை விட்டு வெளியே தொலைவில் ஒரு கூடாரத்தை போட்டு அங்கேயே நிருபர்களை அமர்த்திவிடுவார்கள். விஜய்யை மிக சௌகரியமாக எந்த பத்திரிகையாளரின் கண்ணிலும் படாமல் வேறு வழியாக அழைத்து வந்துவிட்டு மீண்டும் பத்திரமாக அழைத்து சென்றுவிடுவார்கள்.

விஜய்யின் கூட்டத்தை கவர் செய்யதான் ஒரு நிருபர் சென்றிருப்பார், ஆனால், அன்றைய நாளின் முடிவில் ஒரு நொடி கூட விஜய் நிருபர்களின் கண்ணில் பட்டிருக்கமாட்டார். நிகழ்வின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் (கட்சி விருப்பத்துக்கேற்ப) அவர்களே பகிர்வார்கள்.

தவெக விஜய்
தவெக விஜய்

அதை மட்டும் வைத்து நாம் செய்தி வெளியிட்டுக் கொள்ள வேண்டியதுதான். கடைசியாக வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது கூட பத்திரிகையாளர்களை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் உள்ளே அனுமதிக்காமல் கார் பார்க்கிங்கில் செய்தி சேகரிக்க அமர வைத்தார்கள்.

விஜய் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை என்பது பேசப்படுகிறதே ஒழிய, விஜய் தரப்பு பத்திரிகையாளர்களை எப்படி நடத்துகிறது என்பதை யாரும் பேசுவதே இல்லை.

தவெக அளவுக்கு பத்திரிகையாளர்களை மதிப்பு குறைவாக நடத்திய கட்சி வேறெதுவும் இல்லை என அடித்துக் கூறலாம். விஜய் ஒரு உச்ச நட்சத்திரம். அவரை பார்க்க மக்கள் கூட்டம் மொய்க்கிறது. அப்படிப்பட்டவர் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக கேள்வி கேட்கலாம்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றும் ஒருவரின் நட்சத்திரத்தன்மையை அளவிட்டுக் கொள்வதற்கான கருவி அல்ல. பத்திரிகையாளர்களை சந்திப்பதால் மட்டுமே ஒருவரின் நட்சத்திரத்தன்மை தேய்ந்தும் விடாது. பத்திரிகையாளர்கள் மக்களின் பிரதிநிதிகள். சமூக பிரச்னைகள் சார்ந்து மக்களுக்கு இருக்கும் கேள்விகளை அரசியலர்களை நோக்கி அவர்களால் நேரடியாக கேட்க முடியாது.

எனில், அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நிருபர்களே அந்த கேள்விகளை கேட்க வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பின் வழியேதான் ஒரு தலைவரின் நிர்வாக திறனையும் சமூகப் புரிதலையும் அறிந்து கொள்ள முடியும்.

இப்போதைய சூழலில் ஒரு தலைவர் சுயசிந்தனை கொண்டவராக இருக்கிறாரா பிறரை நம்பியவராக இருக்கிறாரா என்பதையும் பத்திரிகையாளர் சந்திப்பின் வழிதான் மக்கள் அறிய முடியும். இந்த விஷயத்தையெல்லாம் விஜய் தரப்பு உணரவே இல்லை.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

விஜய்யின் நட்சத்திரத்தன்மையை பொத்தி பாதுகாப்பதில் மிக முக்கியமானது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விடவே கூடாது என்று அவரின் வியூக வகுப்பு குழு நோட் போட்டு கொடுத்திருக்கிறது. அதை விஜய் அப்படியே பின்பற்றுகிறார். தவெக தலைவர் விஜய் என்ன வியூகத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், முதல்வர் விஜய்க்கு அந்த சுதந்திரம் இல்லை. அவர் மக்களின் பிரதிநிதியாக உச்சப்பதவியில் அமர்ந்திருக்கிறார். மக்கள் அவரின் கையில் பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கும் மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்களுக்கும் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வர் விஜய்யின் கடமை.!

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; ஏற்கெனவே ரூ.7 உயர்வு; இன்னும் எவ்வளவு உயரலாம்?

ஈரான் போர் காரணமாக, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றாமல் மத்திய ... மேலும் பார்க்க

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் ராணுவம்,... மேலும் பார்க்க

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் இந்த யோசனை?

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது புழக்கத்... மேலும் பார்க்க

22 வயதில் ஐபிஎஸ்; `தமிழ்நாட்டின் புதிய டிஜிபி' - மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க, 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் புதிய ஆட்சியை அமைத்தார். முதல்வரா... மேலும் பார்க்க

பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர் விஜய்! - முன்னாள் முதல்வர்கள் பின்பற்றிய மரபை உடைப்பது முறையா?

முதல்வர் விஜய் அவர்கள் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் கூப்பிட கூப்பிட, எந்த பதிலும் சொல்லாமல் போன அந்த வீடியோ தான் இணையதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.ஏன் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை தவிர்க்கி... மேலும் பார்க்க