ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேர...
"`எனக்கு சொந்தம் இல்ல; நீங்கதான் இறுதி சடங்கு செய்யணும்'னு சத்யேந்திரா சொன்னார்"- உதவும் கரங்கள் பகு
நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திரா கடந்த வாரம் இயற்கை எய்தினார். சினிமா சார்ந்த நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். பெங்களூருவைச் சேர்ந்தவர் பல ஆண்டுகளாகச் சென்னையில் தனியாகவே வாழ்ந்து வந்தார்.
பெங்களூருவில் அவருடைய உறவினர்கள் வசிக்கிறார்கள். ஆனால், அவர் இறந்த சமயத்தில் அவருடைய உறவினர்கள் யாரையும் தொடர்புகொள்ள முடியாமல், சத்யேந்திராவின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

பிறகு, 'உதவும் கரங்கள்' அமைப்பைச் சேர்ந்த பகு, சத்யேந்திராவின் இறுதிச் சடங்கிற்கான வேலைகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். பிணவறையில் உடலை வாங்கி பெங்களூருவில் வசிக்கும் சத்யேந்திராவின் உறவினர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவருக்கு இறுதி மரியாதையைச் செய்து முடிக்க வைத்திருக்கிறார் பகு.
இது தொடர்பாக நம்மிடையே பேசியவர், "இந்தச் சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழும் மனிதர்களை நாம் எந்தளவுக்கு மதிக்கிறோம் என்ற பெரிய கேள்வி எனக்குள் இருக்கிறது.
அவர்களைப் பார்த்ததும் நலம் விசாரிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர் இவரைப் போன்றவர்களின் பரந்த சிந்தனையையும் அறிவையும் பார்த்து ஈர்க்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக இவருக்கு நல்ல ஆதரவைத் தந்தார்கள்.
கடந்த 2021-ஆம் ஆண்டு, எங்களது அமைப்பு சார்பாக மறைந்த இயக்குநர் அருள்மொழி நினைவாக இவருக்கு விருதும், ரூபாய் 5,000 பணமும் வழங்கினோம். நாமும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் என்பதால், எதிர்காலத்தில் நமக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்ற பயம் இவரைப் பார்க்கும்போதெல்லாம் எழும். இவருடன் பழகிய நண்பர்கள் ஏன் இவரைத் தனிமையில் விட்டார்கள் என்று தெரியவில்லை.

கொரோனா பேரிடர் காலத்தில் மயான ஊழியர்கள், பிரேதப் பரிசோதனை செய்வோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்தோம். லாக்டவுன் சமயத்தில் வாழ்வாதாரம் இழந்த சத்யேந்திரா போன்ற கலைஞர்களின் வீட்டு வாடகையை ஆறு மாதங்களுக்கு நாங்களே செலுத்தினோம்.
மேலும், ஆதரவற்ற நிலையில் இறந்த பலரது உடல்களையும் நாங்களே அடக்கம் செய்தோம். நாங்கள் செய்யும் இந்தச் சேவைகளைப் பத்திரிகைகள் வாயிலாகத் தொடர்ந்து படித்து வந்த சத்யேந்திரா, என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.
"நான் ஒருவேளை இறந்துவிட்டால் என் சொந்தங்களோ, நண்பர்களோ யாரும் வரமாட்டார்கள். எனவே, நீங்களே எனக்கான இறுதி மரியாதையைச் செய்துவிட வேண்டும்" என்று என்னிடமும், நாங்கள் உதவி செய்த மற்ற சில கலைஞர்கள் முன்னிலையிலும் இரண்டு மூன்று முறை உருக்கமாகக் கூறினார்.
அவர் மறைந்த செய்தி எனக்கு மே 28-ஆம் தேதி மாலைதான் தெரியவந்தது. அவர் காலையிலேயே இறந்துவிட்டதாகவும், அவரது உடலை வாங்க யாரும் உரிமை கோரவில்லை என்றும் அறிந்தேன்.
இறப்பதற்கு முன்பு ஆறு நாட்களாக அவர் மருத்துவமனையில் இருந்ததே யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து, எங்களது 'உதவும் கரங்கள்' அமைப்பின் சார்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். அதன்பின்னர், பெங்களூரிலிருந்து வந்த அவரது அக்கா மற்றும் உறவினர்களை எங்கள் இல்லத்தில் தங்க வைத்து உதவினோம்.

வறுமையின் காரணமாக உடலை பெங்களூருக்கு எடுத்துச் செல்ல வசதி இல்லாததால், இங்கேயே அடக்கம் செய்தோம். இதற்கிடையில், மே 29-ஆம் தேதி ராயப்பேட்டை பிணவறைக்குச் சென்றபோது அங்கு அவரது உடல் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
முதலில் குமரன் காலனி காவல் நிலையத்திலும், பின்னர் வடபழனி காவல் நிலையத்திலும் வழக்கு பதிவானதால் குழப்பம் ஏற்பட்டு, அவரது பெயர் தெரியாத காரணத்தால் 'ஆதரவற்றவர்' எனப் போலீஸார் உடலைப் பதிவு செய்திருந்தனர். அதன் பின்னரே சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சத்யேந்திரனின் உடலை எங்களது 'உதவும் கரங்கள்' அமைப்பின் சார்பாக நாங்கள் உரிமை கோரியதும், "அவர் என்ன அனாதையா? அநாதைகளை அடக்கம் செய்யும் அமைப்பு வந்து இவரை எடுக்கும் அளவுக்கு அவர் தரம் தாழ்ந்தவரா?" என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்துப் பதிவிட்டனர்.
இது முற்றிலும் புரிதல் இன்மையால் எழுந்த விமர்சனம். ஊடகங்களில் "யாருமே உரிமை கோராத நிலையில் உடல் இருக்கிறது" என்று செய்தி வந்ததால்தான், நாங்கள் முன்னின்று உரிமை கோரினோம். ஆயிரம் பேர் ஆயிரம் கருத்துக்களைச் சொன்னார்களே தவிர, யாரும் இதற்கான முன்னெடுப்புகளை எடுக்க முன்வரவில்லை.
அந்த இக்கட்டான நேரத்தில், "அவர் என் நண்பர், நாங்களே இறுதி மரியாதை செய்வோம்" என்று சிலர் தரம் தாழ்ந்து பேசியது மனதிற்குப் பெரிய கஷ்டத்தை அளித்தது. ஆனாலும், சத்யேந்திரா உயிருடன் இருந்தபோது எங்களிடம் கொடுத்த வாக்குறுதிக்காக, இந்த விமர்சனங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தோம்.

சத்யேந்திரா ஒரு பிரபல கலைஞர், என்சைக்ளோபீடியாவாகத் திகழ்ந்தவர். ஆனால், இந்தச் சமூகத்தில் யாருமே இல்லாமல் இறந்து போகும் விளிம்புநிலை மனிதர்களின் நிலை என்ன?
வீதியோரம் வாழ்பவர்கள் யாசகம் பெற்றுச் சாப்பிட்டாலும், அவர்கள் ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்திற்கு வரி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு மனிதனின் இறுதிச் சடங்கிற்கு அதிகபட்சம் ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரைதான் செலவாகும்.
எனவே, இப்படியானவர்களுக்கு இந்த இறுதிச் சடங்குப் பொறுப்பை அரசாங்கமே முழுமையாக ஏற்க வேண்டும். அரசாங்கமே இதற்கென அதிகாரிகளை நியமித்து, ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட முதியவர்களின் உடல்களை நல்ல முறையில் அடக்கம் செய்ய ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும்.
மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வை அரசாங்கத்திற்குக் கொண்டு சேர்ப்பதே முக்கியம்.

எங்களது 'உதவும் கரங்கள்' அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பணியில் ஈடுபட்டு, இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளது.
இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த பெரிய நடிகர்களிடமும் நான் இதையே கோரிக்கையாக வைத்தேன். செல்வாக்குமிக்க மனிதர்கள் இக்கோரிக்கையை முன்வைக்கும்போது அது எளிதாக அரசாங்கத்தை சென்றடையும்.
இத்தகைய இறுதிச் சடங்குகளை அரசாங்கமே நெறிமுறைப்படுத்தி நடத்திவிட்டால், தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு, சத்யேந்திரா போன்ற மனிதர்களின் இறுதிப் பயணம் இன்னும் சிறப்பான மரியாதையுடன் அமைந்திருக்கும்." என்றார்.

















