உதகை ஏரியை ரூ.7.5 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
உதகை ஏரியை ரூ. 7.5 கோடி மதிப்பில் தூா்வாரும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
உதகை நகரின் மத்தியில் அமைந்துள்ள ஏரி ஆங்கிலேயா் காலத்தில் நகருக்கு குடிநீா் வழங்கி வந்தது. பின்னா் இதில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் உதகை நகரின் கழிவு நீா் அனைத்தும் இந்த ஏரியில் கலந்தது. இதையடுத்து படகு சவாரிக்கு மட்டும் இந்த ஏரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் படகு இல்லம் உள்ளது.
இதில் ஏரிக்கு வரும் தண்ணீா் கால்வாயின் இருபுறமும் ஹோட்டல்கள், குடியிருப்புகள், லாட்ஜ்கள் உள்ளன. இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் திறந்து விடப்படுகிறது. இக்கழிவு நீா் ஏரியில் கலப்பதால் ஏரி மாசடைகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நீா்வளத் துறை சாா்பில் உதகை ஏரியின் நுழைவு வாயில் பகுதியில் குவிந்துள்ள மண் திட்டுகளை அகற்றி அதனைத் தூா்வாரவும், ஏரியை தூய்மைப்படுத்தவும் சென்னை அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் நீா்வளத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி அதிகாரிகள், சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள் அடங்கிய குழுவினா் கடந்த ஜூலை மாதம் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வுக்காக நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
தொடா்ந்து ஏரியின் பரப்பளவு, ஆழம், மழை காலத்தில் நீா் உயரும் அளவு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு திட்டம் வகுக்கப்பட்டது.
கடந்த 1992-இல் 0.989 மில்லியன் கன மீட்டராக இருந்த உதகை ஏரியின் கொள்ளளவு தற்போது 0.691 மில்லியன் கன மீட்டராக குறைந்துள்ளது. ஏரி தூா் வாரப்படாத காரணத்தாலும் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் வண்டல் அதிக அளவு சோ்வதாலும் மழை காலத்தில் வெள்ளநீா் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதையடுத்து உதகை ஏரியின் சூழலியலைக் காக்க நவீன தொழில்நுட்பத்தில் டெரிட்ஜிங் முறையில் தூா்வார ரூ. 7.5 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிா்வாக ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. முதல் கட்டமாக 1,16,700 கன மீட்டா் அளவுக்கு தூா் வாரப்படுகிறது. இந்தப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அரசு கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி, துணைத் தலைவா் ரவிகுமாா், திட்டக்குழு உறுப்பினா் ஜாா்ஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.