Vetri Maaran: "'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான்" - வெற...
Vetri Maaran: "'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான்" - வெற்றி மாறன்
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது.
6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தப் பிறகு வெற்றி மாறன் இந்த நிகழ்வு குறித்தும், பா.ரஞ்சித்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார்.
வெற்றி மாறன் பேசுகையில், "'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான். பா. ரஞ்சித்தின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முன்னெடுப்பும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன.
அதில் மிக முக்கியமானதாக இதை நான் பார்க்கிறேன். 6ஆம் முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இத்தனை பேர் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இங்கு எந்தக் கலைக்கு மேடையை அமைத்துக் கொடுக்குது என்பதுதான் முக்கியம். இங்கு பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கலைஞர்களின் நோக்கம் சினிமா கிடையாது. அவர்களுடைய நோக்கம் சமூக மாற்றம் மட்டுமே.
இங்கு கேட்ட அத்தனை பாடல்களும் சமூக மாற்றத்திற்கான பாடல்களாகத்தான் இருந்தன. மாற்றம் விரைவில் வரணும்!" எனக் கூறினார்.

















