Vetri Maaran: "'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான்" - வெற...
Salman Khan: பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாள் விழா; தோனி, இந்தி நடிகர்களுடன் கொண்டாடிய சல்மான் கான்!
நடிகர் சல்மான் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து இந்தப் பிறந்தநாளை சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பன்வெலில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார்.
பிறந்தநாள் விழாவிற்காக நேற்று மாலையிலிருந்து பாலிவுட் நண்பர்கள் சல்மான் கான் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து இந்தப் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். இந்தப் பிறந்தநாளில் சல்மான் கானின் பெற்றோர், சகோதரர், சகோதரிகள் என அனைத்து உறவினர்களும் கலந்து கொண்டனர்.
நடிகர் சந்தீப் ஹோடா, சஞ்சய் தத், ஆதித்ய ராய் கபூர், ரகுல் பிரீத் சிங், தபு, ஹூமா குரேஷி, மகேஷ் மஞ்சிரேகர், தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, ரமேஷ் தொரானி உட்பட சல்மான் கானின் பாலிவுட் நண்பர்கள் இந்தப் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். நடிகை ஜெனிலியா தேஷ்முக் தனது இரண்டு மகன்களுடன் இந்தப் பிறந்தநாளில் கலந்து கொண்டார்.

சல்மான் கானின் முன்னாள் காதலி சங்கீதா பிஜ்லானி, மிகா சிங் உட்பட பலர் நள்ளிரவு வரை வந்து கொண்டே இருந்தனர். இரவில் தொடங்கிய பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நீடித்தது. சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு வெளியில் ஏராளமான சினிமா புகைப்படக் கலைஞர்கள் கூடியிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் சல்மான் கான் தனது பண்ணை வீட்டிலிருந்து வெளியில் வந்தார்.
அவர் கேக் ஒன்றை எடுத்து வந்து பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கேக் வெட்டி அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கு சல்மான் கான் வழங்கினார். அதோடு அவர்களுடன் சேர்ந்து சல்மான் கான் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மூத்த பெண் பத்திரிகையாளர் பாரதி துபே இதில் கலந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் சல்மான் கான் அவரைக் கட்டித்தழுவி அவரது நெற்றியில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சல்மான் கான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்ற மாபியாவால் அச்சுறுத்தல் இருப்பதால் பண்ணை வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சல்மான் கானின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகள் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இன்று மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியில் கூடும் ரசிகர்களின் வாழ்த்துகளை சல்மான் கான் ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.


















