செய்திகள் :

`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

post image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், எம்ஜிஆர் நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது.

விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
``உலகிலேயே முதல் முதலாக நடிகர் ஒருவர் அரசியல் தலைவராகி மக்களின் ஆதரவோடு முதல்வராகப் பதவி ஏற்றது எம்ஜிஆர் தான். அமெரிக்க அதிபர் ரீகன் இரண்டாவது தான். அமெரிக்காவில் சிகிச்சை பெற படுக்கையில் இருந்தவாறே தமிழகத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஒரே நபர் எம்ஜிஆர் தான். உலகத்தில் வேறு யாரும் இல்லை.

தமிழகத்தின் வடக்கு பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று எம்ஜிஆரிடம் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறி, தனியார் பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து, 1984-ல் வேலூர் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.

பின்னர் 180 மாணவர்களோடு தொடங்கி 2001-ல் பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்றது. இப்போது வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய 4 வளாகங்களில் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

விஐடி
விஐடி

விஐடியில் படித்த மாணவர்கள் உலகெங்கும் 84 நாடுகளில் பணிபுரிகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் எம்ஜிஆர் ஒருவர் தான் காரணம்.
தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு காமராஜரும், உயர்கல்வியைப் பொறுத்தவரை எம்ஜிஆரும் அடித்தளம் போட்டனர்.

இந்தியா உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 28 சதவீதம் என்ற நிலையில் பின்தங்கிய போதிலும், தமிழகம் 50 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருப்பதற்கு வித்திட்டவர் எம்ஜிஆர் தான் . அவர் காலத்தில் 6 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. சுமார் 40 ஆண்டு கால கோரிக்கையான தமிழ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர் எம்ஜிஆர் தான்.

இப்போது தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படவில்லை. நாட்டின் மிக மூத்த பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கிடையாது. இந்த சூழ்நிலை தமிழர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். மத்திய, மாநில அரசும் தங்களது பிரச்சினைகளை ஒத்தி வைத்து கல்வியில் மட்டுமாவது ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். அரசுக்கும், ஆளுநருக்குமான பிரச்சினை மக்களையும், மாணவர்களையும் பாதிக்கக்கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.


அதேபோல, அரசு நிர்வாகத்தில் தொடர்பு இல்லாத தலையீட்டை, குறுக்கீட்டை எப்போதும் விரும்ப மாட்டேன் என்றும், எனது மனைவியாக இருந்தாலும், உறவினர்கள் என்று சொல்லி கொள்பவராக இருந்தாலும் இது பொருந்தும். அமைச்சர்கள், அதிகாரிகள் யாராக இருந்தாலும் என்னுடைய அபிப்ராயத்தை அறிந்து நடக்க வேண்டும் என்று நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டவர் எம்ஜிஆர் ஒருவர் தான்.


எம்ஜிஆர் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். பெரியார் கொள்கை பற்றி பேசியது இல்லை. ஆனால், அவரது கொள்கைகளை நிறைவேற்றி காட்டினார். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நிறைவேற்றி காட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆரை இதயக்கனி என்று கூறியவர் அண்ணா.
1986-ல் அண்ணாவை மறக்காமல் இரு மொழி கொள்கை தொடரும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர். அவர் தனது வாழ்நாளில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சாதனைகளை படைத்தவர்.

மக்களிடம் அன்பை பெற்றிருந்தார். கடைசி வரை மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என எண்ணினார்.
1977 முதல் 1987 வரை தமிழகத்தில் நல்லாட்சி செய்தார். யாரையும் புண்புடுத்தி பேசுவதை விரும்ப மாட்டார். மற்றவர்களை மதித்தார். மக்களுக்காக வாழ்ந்தார். அவர் என்றைக்கும் நம் நினைவில் இருப்பார். தமிழர்கள் எங்கிருந்தாலும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.

திரைப்பட பாலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “விஐடி வேந்தர் விசுவநாதனை அரசியலில் அறிமுகப்படுத்தியது அண்ணா தான். எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கொடுக்கும் பழக்கம் கொண்ட கொடையாளர் எம்ஜிஆர். எம்ஜிஆர் மறைந்து 38 ஆண்டு காலம் ஆகியும் தமிழக அரசியலில் புவிஈர்ப்பு விசையாக இருப்பது எம்ஜிஆர் எனும் மூன்று எழுத்து மந்திரச்சொல். யாரேனும் ஒருவர் உதவி கேட்டால் செய்யக்கூடிய மாண்பு உள்ளவர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றிட அதிமுகவைத் தொடங்கினார். சாமானியவர்களையும் அடையாளப்படுத்தினார். நம் கையில் ரேகை இருக்கும். எம்ஜிஆர் கையில் இருந்தது ஈகை. அதனால் அவர் சூடினார் வாகை. அவரை போல வசதி, வாய்ப்புகள் வந்தாலும் மற்றவர்களுக்கு உதவிடும் குணம் வேண்டும். மனித நேயம் மிக்க தலைவர் எம்ஜிஆர். எல்லோர் மனதையும் கவர்ந்தவர்” என்றார்.

விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் வரலாறு படைத்த தலைவர் எம்ஜிஆர். வரலாற்றை படைக்க படைக்கப்பட்ட தலைவர். பொருளாதாரம் தெரியாதவர் என்று  விமர்சிக்கப்பட்ட நிலையில், எனக்கு வறுமை தெரியும், அதை நான் ஒழிப்பேன் என்று பதில் அளித்தவர். கட்சி தொண்டர்களின் உயிர்களுக்கு மதிப்பு தந்தவர் எம்ஜிஆர்.

இப்போது திரைப்படங்களில் தணிக்கை பிரச்சினை பற்றி பரவலாக அறிகிறோம். ஆனால், எம்ஜிஆர் காலத்திலும் திரைப்படங்களில் பாடல்களில் தணிக்கை இருந்தது. தற்போது கார்ப்பரேட் உலகில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அதிக நிதி செலவிடப்படுகிறது.
ஆனால், எம்ஜிஆர் அந்த காலத்திலேயே சமூகத்திற்கு ஏராளமான நிதி வழங்கியவர். எம்ஜிஆர் சிறந்த தலைமைப்பண்பை கொண்டவர். அரசியல் ரீதியாக தன்னை திட்டியவர்களுக்கும் உதவி செய்தவர். எம்ஜிஆரின் பாடல்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்ஜிஆர் பாடல்களை ரசித்து கேட்பவர் தான். தமிழகத்தில் ஏழை பணக்கார வித்தியாசம் இல்லாமல் ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்” என்றார்.

முன்னதாக, கவிஞர் வசந்தநாயகன் எழுதிய “இதயம் கவர்ந்த எம்ஜிஆர்” நூல் வெளியிடப்பட்டது.  நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பா.மோகன், பாண்டுரங்கன், சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.வீரமணி, எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பார்த்திபன், லோகநாதன், சூரியகலா, சம்பத், மற்றும் எம்ஜிஆரின் உறவினர்கள் விஜயகுமார், மினி, லதா ராஜேந்திரன், சீதா பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

`பெண்களால் ஆழமான கருத்துகளை முன்வைக்க முடியும்.!” - எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் | Chennai Book Fair

ஒரு ஆணின் பார்வையில், ஆண் எழுதும் எழுத்துக்களே பெரிதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெண்ணின் பார்வையும், கருத்தும், எழுத்தும் பதிவு செய்யப்படுவது அவசியமாகிறது.அதற்கான ஒரு வெளியை உருவாக்க, பெண்களுக்கா... மேலும் பார்க்க

`எங்கள் கதையை எங்களால்தான் எழுத முடியும் என்பதன் விளைவுதான் திருநங்கை ப்ரஸ்!' - நிறுவனர் கிரேஸ் பானு

தமிழ் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் அறிவுப் பெருவிழாவாகக் கருதப்படும் இந்தப் புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம... மேலும் பார்க்க

MAHER: 19-வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்திய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் நிகர்நிலைப்பல்கலைக்கழகமான மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MAHER), அதன் ஒரு அங்கமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவ... மேலும் பார்க்க