என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் ...
திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?
திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். விவசாயமும், நெசவும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தத் தொகுதியில் 1951 முதல் 2016 வரை நடந்த 14 தேர்தல்களில், 6 தடவை அதிமுக-வும், 3 தடவை திமுக-வும், 2 தடவை காங்கிரஸும், ஒரு தடவை பாமக, தேமுதிக, சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தி.மு.க-வின் மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரன் எம்.எல்.ஏ-வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஹரி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்தத் தடவை சிட்டிங் எம்.எல்.ஏவும் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளருமான சந்திரன், சீட் கேட்டு அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி உட்பட சிலர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் . அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ கோ.ஹரி, ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை ரவி ஆகியோர் சீட்டை எதிர்பார்க்கிறார்கள். இவர்களைத் தவிர இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பள்ளிப்பட்டு நரசிம்மனும் இந்தத் தேர்தல் களமிறங்க இருக்கிறார். இந்த நிலையில்தான் சசிகலா, சில தினங்களுக்கு முன்பு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியவர், இன்று அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். அதனால் சசிகலாவின் ஆதரவாளரான நரசிம்மன் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார்.
தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசல் தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சிலர்,
``திருத்தணி தொகுதி தி.மு.க-வைப் பொறுத்தவரை இரண்டு கோஷ்டிகளாக நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த கோஷ்டிப் பூசல் பஞ்சாயத்து தேர்தல் பொறுப்பாளர் ஆர்.ராசா எம்.பி-யின் கவனத்துக்குச் சென்றது. உடனே அவர் இரு தரப்பையும் நேரில் அழைத்து அவர்களைச் சமரசப்படுத்தி வைத்தார். ஆனால் கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி ஏற்படவில்லை. தீவிரமாக எம்.எல்.ஏ சீட்களை கேட்டு சந்திரனும் பூபதியும் காயை நகர்த்தி வருகிறார்கள். இதில் பூபதியின் மனைவி நகர்மன்றத் தலைவியாக இருப்பதால் நகராட்சி நிர்வாகத்தில் பூபதி டீமின் கை ஓங்கி நிற்கிறது.
அதன் காரணமாக திருத்தணியில் உள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட்டின் பெயரை நீக்கி விட்டு கருணாநிதி பெயரை சூட்டிய சர்ச்சையில் பூபதி டீம் சிக்கியது. பெயர் மாற்றத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து மீண்டும் காமராஜர் பெயர் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருத்தணி புதிய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தடவை எப்படியாவது எம்.எல்.ஏ சீட்டை வாங்கி விட வேண்டும் என பூபதி, கட்சித் தலைமையிடம் நல்ல பெயரை வாங்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் தி.மு.க-வின் வி.வி.ஐ.பி-க்களை சிறப்பாக கவனித்தும் பூபதி அனுப்பி வைக்கிறார். மாவட்டச் செயலாளராக இருக்கும் சந்திரன், திருவள்ளூர், திருத்தணி என இரண்டு தொகுதி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்ல முயன்றாலும், அவ்வப்போது பூபதி டீம் உள்ளடி வேலைகளைச் செய்து வருகிறது. அதை மாவட்டச் செயலாளர் சந்திரன் சமாளித்து கட்சிப் பணிகளைச் செய்து வருகிறார்" என்றனர்.

திருத்தணி தொகுதி அ.தி.மு.க-வினர் நம்மிடம் கூறுகையில், ``முன்னாள் எம்.எல்.ஏ திருத்தணி கோ.ஹரி, சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவரைத் தவிர திருத்தணி ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை ரவி உட்பட சிலர் சீட் கேட்டிருக்கிறார்கள். இதில் கோ.ஹரி, ரவி ஆகியோரில் ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளது. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொகுதியில் பிரசாரம் செய்ய வந்தபோது கோ.ஹரியும் ரவியும் போட்டிப் போட்டி ஏற்பாடுகளைச் செய்தனர். இந்தத் தொகுதியில் தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசல் எங்களுக்குச் சாதகமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம், மலைக் கோயில் நிர்வாகத்தில் பூபதியின் தலையீடு அதிகளவில் உள்ளதால், மக்கள் கடும் அதிருப்தியிலிருக்கிறார்கள். காமராஜர் பெயரில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட்டின் பெயரை மாற்றியது முதல் திருத்தணி பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றியது வரை தொடர்ந்து பூபதி செய்யும் அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அறிஞர் அண்ணாவின் பெயரில் செயல்பட்ட பழைய பேருந்து நிலையத்தின் பெயரையே புதிய பேருந்து நிலையத்துக்கு வைக்க நாங்கள், நெசவாளர் சங்கத்தினர் என சிலர் கோரிக்கை வைத்தோம். ஆனால் கருணாநிதி பெயரை சூட்டி புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்துவிட்டார்கள்" என்றனர்.
சசிகலாவின் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பள்ளிப்பட்டு நரசிம்மன், திருத்தணி தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவு அவரால் பிரிக்கப்படும் ஓட்டுக்கள் நிச்சயம் அ.தி.மு.க-வின் வெற்றிக்குப் பாதகத்தை ஏற்படுத்தும். அதோடு த.வெ.க சார்பில் களமிறங்கவிருக்கும் மாவட்டச் செயலாளர் டில்லி பாபுவுக்குக் கிடைக்கும் ஓட்டுக்களும் வெற்றி வித்தியாசத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
















