ஊட்டி: பாறையில் சரிந்து விழுந்த யானைக்கு நேர்ந்த சோகம்; சத்தம் கேட்டுப் பதறிய மக்கள்; என்ன நடந்தது?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி பல்லுயிர் பெருக்க வள மண்டலம். ஆனால், யானைகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சி பணிகளால் அனைத்தும் துண்டாடப்பட்டுக் கிடக்கின்றன. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் திணறி வருகின்றன.
பல்வேறு இடர்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்தாலும் கடுமையான எதிர்கொள்ளல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. யானைகளின் உணவுத்தேவை மற்றும் இடப்பெயர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் குன்னூர் மலைச்சரிவில் தனியார், நெடுஞ்சாலைத்துறை, மலை ரயில் நிர்வாகம் போன்றவற்றால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களால் தற்போது போக்கிடம் தெரியாமல் யானைகள் தடுமாறி வருகின்றன.
இந்நிலையில், குன்னூர் மலைச்சரிவில் நெடுஞ்சாலையோர வனத்தில் நேற்று மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யானை ஒன்று அடி சறுக்கி, 20 அடி பள்ளத்தில் விழுந்திருக்கிறது. பாறை கற்களோடு யானை சரிந்து விழும் பயங்கர சத்தத்தைக் கேட்டுப் பதறிய அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
20 அடி பள்ளத்தில் விழுந்து காயத்துடன் துடித்த யானைக்குக் குடிநீர் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். எழுந்து நிற்பதற்கு முயற்சி செய்த அந்த யானை, நிலைதடுமாறி அருகிலிருந்த அருவிப் பாறையில் சறுக்கி மீண்டும் பல அடி பள்ளத்தில் உருண்டு விழுந்திருக்கிறது. இதைக் கண்டு பதறிய வனத்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது யானை பரிதாபமாக உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். மலைச்சரிவில் யானை சறுக்கி விழும் வீடியோ பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சோகம் குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "இந்த பகுதியில் கூட்டத்துடன் நடமாடி வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று பாறைகள் நிறைந்த பல அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது. யானைகள் இது போன்று அடி சறுக்கி விழுவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யானைகளின் வழக்கமான வழித்தடத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் " என்றனர்.