மயிலாடுதுறை: `அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை' - குமுறும்...
ஊழியர்களுக்கு கார், வீடு கொடுத்து மகிழும் சூரத் வைர வியாபாரி - ரூ.12ஐ 15,000 கோடியாக்கியது எப்படி?
குஜராத் மாநிலத்தில் வைரம்தான் பிரதான தொழில். பெரும்பாலான தொழிலதிபர்கள் சூரத்தில் வைரத்தை பட்டை தீட்டி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சூரத் இந்தியாவின் `வைர நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
சூரத்தில் சாவ்ஜி தோலாகியா எனும் பெயரை கேட்டாலே பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். இந்தியாவின் வைர மன்னனாக கருதப்படும் சாவ்ஜி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி தனது கம்பெனியில் அதிக நாட்கள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விதவிதமாக பரிசுகளை கொடுத்து அழகுபார்த்து வருகிறார்.
தொழிலாளர்களுக்கு கார், சொந்த வீடு, தங்க ஆபரணங்கள் என கொடுக்கும் சாவ்ஜி ஒரு காலத்தில் சொந்த ஊரான செளராஷ்டிராவில் இருந்து பிழைப்புக்காக சூரத் வந்துள்ளார். சூரத்தில் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட் என்ற பெயரில் வைர கம்பெனி நடத்தும் சாவ்ஜி தனக்கென தனிப்பெயர் எடுத்து வைத்திருக்கிறார்.

அவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் லாபத்தில் பெரும்பகுதியை தொழிலாளர்களுக்காகவே செலவு செய்துவிடுகிறார்.
சாவ்ஜி தனது 12வது வயதில் தனது சொந்த ஊரான சுதாலா என்ற கிராமத்தில் இருந்து சூரத்திற்கு வந்தார். அவர் அப்படி வரும் போது அவரது சட்டை பாக்கெட்டில் வெறும் 12 ரூபாய் மட்டுமே இருந்தது. சூரத் வந்து அந்த சிறிய வயதிலேயே வைர கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையை நன்றாக கற்றுக்கொண்ட பிறகு தானே சொந்தமாக தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் அந்நேரம் அத்தொழிலை தொடங்க தேவையான பணம் அவரிடம் இல்லை. இதனால் அவர் தொழில் தொடங்க அவரது மாமா சிறிது பணம் கொடுத்து உதவினார்.
அந்த பணத்தில் தொழில் தொடங்கிய சாவ்ஜி கம்பெனியில் முழு கவனத்தையும் செலுத்தி வேலை செய்தார். இதனால் அவரது கம்பெனி மளமளவென வளர்ச்சி அடைந்தது. இன்றைக்கு அவரது கம்பெனி வருடத்திற்கு 15 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு வேலை செய்கிறார்கள். தொழிலாளர்களுக்கு என்ன வேண்டுமானாலும் உடனே அவர்களுக்கு செய்து கொடுக்கிறார். அதோடு வறட்சி பாதித்த கிராமங்களில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
தொழிலாளர்களுக்கு இந்த அளவுக்கு அடிக்கடி பரிசுப்பொருட்கள் கொடுப்பது குறித்து ஒரு முறை அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''ஊழியர்கள் பாதுகாப்பாக உணரும்போது, அவர்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். நிறுவனத்தை உருவாக்க உதவிய தொழிலாளர்களுடன் கம்பெனியின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள எனது சொந்த லாபத்தை குறைத்துக்கொள்கிறேன்''என்று குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தனது தொழிலாளர்கள் 1260 பேருக்கு கார் கொடுத்துள்ளார். இது தவிர 400 பேருக்கு சொந்த வீடு வாங்கிக்கொடுத்து இருக்கிறார். கடந்த 30 ஆண்டில் தனது கம்பெனி தொழிலாளர்கள் அனைவருக்கும் கார், வீடு கொடுத்து அவர்களையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றி வருகிறார். அவர் கடந்த புத்தாண்டையொட்டி வெளியிட்டு இருந்த இன்ஸ்டாகிராம் பதில்,''வெற்றி என்பது சத்தத்தால் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக நிலைத்தன்மை, நோக்கம் மற்றும் மதிப்புகளால் அளவிடப்படுகிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவர் தொழிலாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதால் தொழிலாளர்களும் மிகவும் உற்சாகமாகவும், விசுவாசமாகவும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களுக்கு கட்டடங்களில் வீடு வாங்கிக்கொடுத்துவிட்டு அதற்காக மாதாந்திர கடன் தவணை தொகையை தனது கம்பெனி பணத்தில் இருந்து கட்டிக்கொண்டிருக்கிறார்.


















