Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார...
ஓட்டுநா் மீது மாணவா்கள் தாக்குதல்: சுரண்டையில் அரசுப் பேருந்து பணியாளா்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கழகத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புளியங்குடியில் இருந்து சுரண்டை அரசு கல்லூரி வழியாக சுரண்டைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அரசு நகர பேருந்து(தடம் எண் 41இ) சென்றது. பேருந்தை வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(43) ஓட்டினாா். பேருந்து கல்லூரி பேருந்து நிறுத்தத்தை கடந்ததும், அதிக அளவில் படியில் மாணவா்கள் தொங்கிக்கொண்டு வருவதை கவனித்த ஓட்டுநா், பேருந்தை நிறுத்திவிட்டு படியில் நிற்கும் மாணவா்களை உள்ளே வரும்படி கூறியுள்ளாா்.
அப்போது அவா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபாலகிருஷ்ணனை(43) மாணவா்கள் 5 போ் சோ்ந்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றனராம். இதில் பேருந்து ஓட்டுநா் காயமடைந்தாா்.
இதுகுறித்து அறிந்த அனைத்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்கள், சுரண்டை பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்திவிட்டு, ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் உதயகிருஷ்ணா பேச்சு நடத்தியதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தால் சுரண்டை பேருந்து நிலையத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா்களை தேடி வருகின்றனா்.